Tamilnadu

புதிய அரசின் முதல் 30 நாட்கள் எப்படி?- விமர்சனங்களுக்கு செயலால் பதில் சொல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

குமுதம்’ இதழில் “புதிய அரசின் முதல் 30 நாட்கள் முடக்கமா, முன்னேற்றமா?’’ என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு குறித்து கார்த்திக் புகழேந்தி கட்டுரை எழுதியுள்ளார்.

அக்கட்டுரை வருமாறு : கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் ஒரு பக்கம்! நிர்வாகக் கட்டமைப்புகளை முடிந்த அளவுக்கு மாற்றியமைக்கும் தொடர்ச்சியான வேலைப்பளு மறு பக்கம்! நூறு நாட்களில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாமல் பொதுமுடக்கத்தை மீண்டும் அமல்படுத்துவது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கோரிக்கை வைத்தபடி, கோவிட் நிவாரண நிதியினை உடனடியாக வழங்குவது என நாலாப் பக்கங்களிலிருந்தும் மேலே பாயக் காத்திருந்த அம்புகளைச் சமாளித்து, மூச்சு முட்டும் வேகத்தில் தன் முப்பது நாட்களை நிறைவு செய்திருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு!

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்பாராட்டு!

இன்று, கோவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் ‘சென்னையைப் பாருங்கள்’ என்று மலேஷிய எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தமிழ்நாட்டைச் சுட்டிக்காட்டும் அளவுக்குமுன் மாதிரி நடவடிக்கைகளால் தமிழ்நாடு மீண்டு கொண்டிருக்கிறது. அதிகாரிகள் நியமனங்கள் ஆச்சரியம் அளித்தாலும் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல், விட்ட இடத்தில் இருந்து தொடங்குவது போல ஒவ்வொருதுறையும் சீராக இயங்குவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனுபவ முதிர்ச்சியைக் காட்டுகிறது.

பெண்களுக்குக் கட்டணமில்லா பேருந்துப் பயணம், பால் விலைக் குறைப்பு, 2.07 கோடி ரேசன்கார்டுதாரர்களுக்குத் தலா நாலாயிரம் ரூபாய் நிவாரணம், கொரோனா சிகிச்சைக்கு அரசு காப்பீடு, தொகுதி மக்களிடம் பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தனித்துறை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் ஐந்து அரசாணைகளுமே எவ்வித விமர்சனத்திற்கும் உள்ளாகாமல் நற்பெயரையே அவருக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன.

சக்சஸ்ஃபுல்லாக அமல்படுத்தியிருக்கிறார்!

நிவாரண உதவிகளை வழங்கும்போது ரேசன் கடைகளில் மக்கள் திரண்டது, சில இடங்களில் கட்சியினர் விளம்பர பேனர் வைத்தது என்று எதிர்த்தரப்பில் இருந்து சிறுசிறு சப்தங்கள் எழுந்தாலும் அவசியமான நேரத்தில் தாமதமில்லாமல் இரண்டு தவணைகளாக வழங்கப்பட்ட கொரோனா நிதியுதவி அனைவரின் முணுமுணுப்புகளையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது.

இன்னொரு பொது முடக்கத்தை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது’ என்று ஏற்கெனவே அறிவித்த போது நிலைமையைச் சமாளிக்க தேவையான முன்னேற்பாடுகளோடு, காவல்துறைக் கடுமை காட்டாமல், இ-பாஸ் குழப்பங்கள் இல்லாமல் குறிப்பாக டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்காமல் சக்சஸ்ஃபுல்லாக அமல்படுத்தியிருக்கிறார். பதவியேற்பு நிகழ்வில் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று உறுதிமொழி ஏற்கும் போதே, ஒரு திடமான முடிவுடன், தீர்க்கமான திட்டமிடலுடன் தான் இந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறேன் என்று தன் அமைச்சரவை உட்பட கூட்டணிக் கட்சியினருக்கும் சமிக்ஞை காட்டிவிட்டார் மு.க.ஸ்டாலின்.

ஆட்சியில் அமர்ந்து சரியாக ஏழாவது நாளில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்டி, ஊரடங்கு தொடர்பான ஐந்து தீர்மானங்களை நிறைவேற்றிய போதே முன்பின் இம்மாதிரி அணுகுமுறையை எதிர்கொண்டு அனுபவமில்லாத எதிர்க்கட்சியினர் கூட திக்குமுக்காடினர்.

ரன்ரேட்டை சீராக வைத்திருக்க உதவியிருக்கிறது!

காலங்காலமாகத் தன்னைத் திட்டித் தீர்த்தவர்களையும் கூட, ‘உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரவமாக இருக்காதே’ என்று அருகில் நிறுத்திக் கொண்டார். அரசியலில் இது ஒரு நல்ல வியூகம். பழைய அரசு இயந்திரத்தைச் சீரமைக்க செயல்திறன் முழுவதையும் செலவிடும்போது, வீண் வம்புகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக் வேண்டியதில்லை. அந்த வகையில் இந்த முப்பது நாட்களை மிகச் சிக்கனமாகப் பார்த்துப் பார்த்து செலவழித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அது அவரது ரன்ரேட்டை சீராக வைத்திருக்க உதவியிருக்கிறது.

பேரிடர்கள் வரும் போதுதான் ஓர் அரசின் செயல்பாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். அந்த வகையில் மு.க.ஸ்டாலினின் தேர்தல் வெற்றிக்கு சிலவாரங்களுக்கு முன்பே தமிழ்நாடு கடும் இக்கட்டான நிலையில் தவித்துக் கொண்டிருந்தது. சுறுசுறுப்பான நடவடிக்கைகள் மட்டுமல்ல; உடனடி மறு சீரமைப்பும் எதிர்காலத் திட்டங்களும் அவசியம் என்ற நிலையில், பதவியேற்ற முதல் நாள், மாலையிலே சென்னை நந்தம்பாக்கம் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தைப் பார்வையிடச் சென்றார்.

கொரோனா பரவலை தடுக்க சிறப்புக் கவனம் செலுத்தினார்!

அடுத்த நாளே தமிழ்நாட்டுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார். மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதினார். அண்டை மாநிலங்களின் உதவியை நாடினார். ஆக்ஸிஜன் படுக்கை வசதி கொண்ட சிறு குறு சிகிச்சை மையங்களை மாவட்டந்தோறும் பரவலாக்கினார். 5,930 கோடி நிதி ஒதுக்கி, மாவட்ட வாரியாக அமைச்சர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்து கொரோனா பரவலைத் தடுக்கச் சிறப்புக் கவனம் செலுத்தினார் மு.க.ஸ்டாலின்.

வெளிப்படைத் தன்மைதான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மிக முக்கியத் தேவை என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியோர், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், சிகிச்சை பெறுவோரின் நிலைமை என்று அத்தனை டேட்டாவும் நொடியில் கையில் வந்து விழுகிறது. இவ்வளவு ஏன், இதுவரை எண்பது, நூறு என்று விற்கப்பட்டு வந்த N-95 முகக்கவசத்தின் அதிகபட்ச விற்பனை விலை வரைக்கும் தீர்மானமாக இவ்வளவு தான் என்று அரசுத் தரப்பில் இருந்து அறிவிப்பு வருகிறது.

தொற்றுப் பரவலைத் தடுப்பதில் சென்னை மாநகராட்சி முன்மாதிரியாக திகழ்கிறது!

உள்ளாட்சித் துறை அமைச்சராக, மாநிலத்தின் துணை முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த காலங்களில் அவர் கற்றுக் கொண்ட ‘மைக்ரோ லெவல் ப்ளானிங்’ இதில் அவருக்குக் கை கொடுத்திருக்கிறது. கூடுதலாக டெக்னாலஜியை துணைக்கு வைத்துக்கொண்டதும் சாமர்த்தியம் தான். அதனால் தான் இன்று தொற்றுப் பரவலைத் தடுப்பதில் முன்மாதிரியாக சென்னை மாநகராட்சி விளங்குகிறது. மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள சென்னையில் கையாண்ட இந்த வழிமுறைகள், மாநிலம் முழுக்க விரிவுபடுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக கொங்கு மண்டலத்திற்குக் கூடுதல் கவனம் தேவை என்று குரல்கள் எழுகின்றன. அவை முழுக்க முழுக்க எதிர்ப்பலைக் குரல்களும் அல்ல! தவிர, கசப்பு மருந்து தான் என்றாலும், பொது முடக்க நீட்டிப்பு நீண்ட நாட்களுக்குத் தாக்குப் பிடிக்காது. அதேவேளையில், தொற்று பாதித்து இறந்த மருத்துவர் குடும்பங்களுக்கு நிவாரணம், காவலர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வாழ்வாதாரத் திட்டங்கள், வைப்பு நிதி, கடன் தள்ளுபடி என்று நலத்திட்ட அறிவிப்புகள் அடுக்கடுக்காக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

ஒருவகையில் மக்களுக்கான அரசின் தார்மீகக் கடமைகள் இவை என்று எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாட்டின் கஜானா வறட்சி உள்ளங்கை நெல்லிக்கனி! அரசின் வருவாய் குன்றி, கடன்பெருத்து படுமோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நீட், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, தமிழ்நாட்டுக்குவர வேண்டிய நிதி கோரிக்கை என்று பனிப்போரும் அல்லாத, துவந்த யுத்தமும் அல்லாத ஒருவித எதிர்மறைப் போக்கு பெருகியிருக்கிறது. ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மத்தியில் உள்ள அத்தனை பேரின் கண்ணிலும் தூசியாக விழுந்திருக்கிறார் தமிழக நிதி அமைச்சர். பிரதமரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்குப் பின்னால் உச்ச நீதிமன்றத்தோடு சேர்த்து அவரது உரிமைக் குரலுக்கும் பங்கிருக்கிறது.

மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவுக்குப் புத்துயிர்!

அதே சமயம், மத்திய அரசு முன்னுரிமை அளித்து, மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டங்களின் பலன் பெரும்பாலும் தமிழகத்திற்குக் கிடைப்பதில்லை. உதாரணமாக நாடு முழுவதும் கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் இது, 1970களிலேயே தமிழ்நாடு முழுக்க தி.மு.க ஆட்சியில் செயலுக்கு வந்துவிட்ட திட்டம். எனவே, புதிய ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்புமில்லை. இந்த நிலையில் தான் மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவுக்குப் புத்துயிரூட்டி புதிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது. இந்த வளர்ச்சித் திட்டங்களின் பலனை மாநிலம் முழுக்கப் பரவலாக்க வேண்டிய அவசியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கண்முன் நிற்கிறது.

முந்தைய அரசைவிட பன்மடங்கு சிறப்பான அரசு!

ஒருவிதத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாநில உரிமை சார்ந்த முன்னெடுப்புகள், நிர்வாக மறுகட்டமைப்பு, முடிவெடுக்கும் துணிச்சல் ஆகிய விஷயங்களின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி முந்தைய பழனிசாமி அரசுடன் ஒப்பிடும்போது பன்மடங்கு சிறப்பானது.

அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று பலரின் பங்களிப்பும் அதற்கு உறுதுணை புரிந்திருக்கிறது. சங்கிலித் தொடர் போல ஒருமித்த கருத்து கொண்ட ஓர் அரசு நிர்வாகம் மு.க.ஸ்டாலினின் செயல்களுக்குப் பின்னணியில் இருந்து முழு ஆதரவை அளித்து வருகிறது. அதனாலேயே, தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்துக்கும் செயல்களால் பதில் சொல்வது போல அசுரவேகத்தில் அவரால் செயல்பட முடிகிறது!

வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அபர்ணா பாண்டே எழுதிய, ‘Making India Great’ புத்தகத்தைப் பரிசளித்தார் ஆளுநர் பன்வாரிலால். அந்தப் புத்தகத்தின் தலைப்பில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு ஒரு மிக முக்கிய செய்தி இருக்கிறது.

நன்றி: குமுதம்

Also Read: மக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை; உத்தரவுகளில் கவனச்சிதறல் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்