Tamilnadu

மொட்டையடித்து, புருவத்தை மாற்றி நேபாளத்துக்கு தப்ப முயற்சி: டெல்லியில் சிவசங்கர் பாபா சிக்கியது எப்படி?

சென்னை கேளம்பாகத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியை நடத்தி வருகிறார் சிவசங்கர் பாபா. இவர் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சமூக வலைதளங்களில் சிவசங்கர் பாபா மீது அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பலரும் புகார்களைக் கூறியிருந்தனர்.

இதையடுத்து மாநில குழந்தை உரிமைகள் ஆணையம் சார்பில் சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், சிவசங்கர் பாபாவுக்கு உடல் நலம் சரியில்லை என ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டடு, பள்ளி நிர்வாகிகள் ஆணையத்தில் ஆஜராகினர்.

இந்த நிலையில், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 3 மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகாரின் பேரில் போலிஸார் போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டார்.

முதற்கட்ட விசாரணையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து சிபிசிஐடி போலிஸார் டேராடூன் விரைந்தனர். அங்கு சிகிச்சையில் இருந்ததாகக் கூறப்பட்ட சிவசங்கர் பாபா காவல்துறை வருவதை அறிந்த அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால், சிவசங்கர் பாபா விமானம் மூலம் தப்பிக்காத வகையில், தேடப்படும் குற்றவாளியாக சி.பி.சி.ஐ.டி போலிஸார் அறிவித்தனர்.

பின்னர் உஷாரான சிவசங்கர் பாபா நேபாளத்துக்கு சாலை வழியாக செல்ல திட்டமிட்டு டெல்லிக்கு சென்றிருக்கிறார். இந்த தகவல் கிடைத்ததை அடுத்து டெல்லி போலிஸாரின் உதவியுடன் காசியாபாத் சித்தரஞ்சன் பகுதியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி போலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதனையடுத்து அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் போலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சிவசங்கர் பாபா இன்று இரவு 8 மணி இண்டிகோ விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்படுகிறார்.

இரண்டு நாள் டிரான்சிட் வாரண்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் 19ம் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: புதிய அரசின் முதல் 30 நாட்கள் எப்படி?- விமர்சனங்களுக்கு செயலால் பதில் சொல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!