Tamilnadu

"சேலத்தில் 10 நாட்களுக்குள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாகும்" : அமைச்சர் செந்தில்பாலாஜி நம்பிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த மாதம் வேகமாக கொரோனா தொற்று பரவியதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டது.

இதனால் தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி பற்றாக்குறையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் 45,484 படுக்கைகள் காலியாக உள்ளது. இருந்தபோதும் அரசு கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, ஏற்கனவே சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்தார்.

அப்போது, கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகளை கொண்ட மையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி புதிதாக அமைக்கப்பட்ட சிகிச்சை மையத்தை மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "சேலம் மாவட்டத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகளோடு சேர்த்து 7,065 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் உட்பட 12 ஆயிரத்து 568 படுக்கைகள் உள்ளன.

தற்போது, அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையால் சேலம் மாவட்டத்தில் 10 நாட்களுக்குள் கொரோனா தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகும். கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது" என்றார்.

Also Read: “தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன்” - மு.க.ஸ்டாலின் மடல்!