Tamilnadu

“நீட் தேர்வு கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது” : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி !

நீட் தேர்வு உள்பட எந்த நுழைவுத் தேர்வும் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். மேலும் பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:-

மருத்துவ கல்விக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு உள்பட எந்த நுழைவு தேர்வும் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. தி.மு.க தேர்தல் அறிக்கையிலும், இது குறிப்பிட்டிருந்தது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

பிளஸ் 2 மதிப்பெண் முறை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்கும். முன்னதாகக் கல்வியாளர்கள், தேர்வுத்துறைச் சார்ந்த அதிகாரிகளுடன் பேசும் போது பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.

பெரும்பாலானோரின் கருத்துகளும் தேர்வை நடத்துவதற்கு ஆதரவாக இருந்தது. எனினும் பொது முடக்கம் அமலில் உள்ள சூழலில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை உன்னிப்பாக கவனித்து பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, அலகுத் தேர்வுகள் என எந்தத் தேர்வுகளும் நடைபெறாத சூழலில் எந்த அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடுவது என்பதற்காக ஒரு குழு அமைக்கப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து மதிப்பெண்களை மதிப்பிடும் பணிகள் உடனடியாகத் தொடங்கும். இதுகுறித்து முதல்வரும் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

ஏற்கெனவே இரண்டு வாரங்களுக்குள் சிபிஎஸ்இ மாணவர்களின் மதிப்பெண்களைக் கணக்கிடுவது குறித்து மத்தியஅரசு அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்குள் தமிழகத்திலும் மதிப்பெண்கள் கணக்கிடும் பணி முடிவடையும். சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதையும் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க உள்ளோம்.

குறிப்பாக மாணவர்களின் முந்தைய செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்படும். ஏனெனில் மற்ற எந்தத் தேர்வுகளும் நடக்காத நிலையில், மதிப்பீடு செய்யவேறு எந்த வாய்ப்பும் இல்லை. மாணவர்களின் பத்தாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களை எடுக்கப் போகிறோமோ, 9ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அல்லது அவற்றில் அவர்கள் வாங்கிய அதிகபட்ச மதிப்பெண்களை மட்டும் எடுக்கப்போகிறோமோ என்பது குறித்த ஆலோசனைகளையும் பெற்று வருகிறோம். விரைவில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தடுப்பூசி விநியோகத்தில் வியாபாரம் செய்யாமல் மக்களை காக்க வேண்டும்” : ‘தினகரன்’ தலையங்கம் வேண்டுகோள்!