Tamilnadu

“விடியலுக்கான வெளிச்சத்தை பாய்ச்சுகிறது தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள்” : ‘தினகரன்’ தலையங்கம் புகழாரம்!

தலைமைச் செயலாளர் தொடங்கி அரசு துறைகளில் முக்கிய அதிகாரிகள் நியமனம் ஊழலற்ற ஒரு அரசுக்கான ஒளிக்கீற்று என ‘தினகரன்’ நாளிதழில் தலையங்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளது.

‘தினகரன்’ நாளிதழில் வெளியான தலையங்கம் வருமாறு:-

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 30 நாட்கள் முடிந்து விட்டன. கொரோனாவின் கோர முகத்தை இந்தியாவே எதிர்கொண்ட சூழலில், ஒரு மாநில முதல்வர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஸ்டாலின் திகழ்கிறார்.

தமிழ்நாட்டில் அவர் ஆட்சி பொறுப்பேற்ற சமயத்தில் கொரோனாவுக்கு மக்கள் கொத்து, கொத்தாக மடிந்து கொண்டிருந்தனர். அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் பலர் திண்டாடிக் கொண்டிருந்தனர். அத்தகைய பரிதாப சூழலில், முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரது அமைச்சரவை சகாக்களும் களம் இறங்கி வியத்தகு சாதனைகளை செய்து காட்டினர்.

இதன் விளைவு ஒரே மாதத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்கைகளும், ஆக்சிஜன் தட்டுப்பாடும் தீர்ந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புகள் 30 நாட்களுக்குள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்திருக்கின்றன. ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 குறைக்கப்பட்டு விட்டது. சாதாரண கட்டண பேருந்துகளில் அனைத்து மகளிரும் இலவச பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டது.

2.07 கோடி ரேஷன் அரிசி கார்டுகளுக்கு கொரோனா நிவாரணம் 2 ஆயிரம் கடந்த மாதம் முதலே வழங்கப்பட்டது. இம்மாதம் 2வது தவணை 2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை செலவினத்தை அரசே ஏற்று கொள்வதும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டமும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. கொரோனா தடுப்பூசிகளும் இதுநாள் வரை இல்லாத அளவுக்கு கடந்த ஒரு மாத காலத்தில் போடப்பட்டன. ஊரடங்கு என்பது பொதுமக்களுக்கு வேப்பங்காய் போன்றது. அத்தகைய காலக்கட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் மற்றும் பலசரக்கு வினியோகமும் வாகனங்கள் மூலம் தட்டுப்பாடின்றி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தகுதிக்கேற்ற பணி நியமன ஆணை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு 5 லட்சம் வரை வைப்பு தொகை, கொரோனா தடுப்பு பணியில் இறந்த அரசுதுறை அலுவலர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு 25 லட்சம் வரை என அரசின் நிதி ஒதுக்கீடுகளும் பயனுள்ளதாகவே அமைந்தது.

கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்களின் தலையில் தொங்கிய கத்தியான பிளஸ் 2 தேர்வும் ரத்து செய்யப்பட்டு விட்டன. சமூக வலைத்தளங்களில் வரும் புகார்களை கூட தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்காணித்து, உடனடியாக தீர்த்து வைக்கிறார். மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு அரசு சார்பில் மரியாதை, விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் உள்ளிட்ட அறிவுப்புகள் இலக்கிய உலகத்தையும் முதல்வர் வசம் ஈர்த்தது.

தலைமைச் செயலாளர் தொடங்கி அரசு துறைகளில் முக்கிய அதிகாரிகள் நியமனம் ஊழலற்ற ஒரு அரசுக்கான ஒளிக்கீற்று. தமிழகத்தில் இப்போது நிகழும் தலைகீழ் மாற்றங்கள் ஒரு விடியலுக்கான வெளிச்சத்தை பாய்ச்சுகின்றன.

Also Read: ‘NEET’க்கு சட்டரீதியாக முற்றுப்புள்ளி வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் : ஒன்றிய அரசுக்கு ‘முரசொலி’ பதிலடி!