Tamilnadu
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உழைப்பைப் பார்த்து அசந்துவிடுகிறேன்” - அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உழைப்பைப் பார்த்து அசந்துபோய்விடுகிறேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 484 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அமலு விஜயன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, “தேர்தல் நேரத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்தார் தலைவர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சரான பிறகு ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மனுக்களுக்கு தீர்வு காண்பதற்காக தனித் துறையை உருவாக்கி அதற்குத் தனி அலுவலர்களை நியமித்து, பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, கோட்டையில் முதலமைச்சர் அலுவலகம் இயந்திரம்போல் இயங்கி வருகிறது. கொரோனா பரவல் தடுப்புப் பணியாக இருந்தாலும் சரி, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றாலும் சரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உழைப்பைப் பார்த்து நான் அசந்துவிடுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “தென்பெண்ணை ஆற்றில் இருந்து வீணாகும் தண்ணீரைப் பாலாற்றுக்குத் திருப்பிவிட்டால் ஆண்டுக்கு மூன்று மாதத்துக்குத் தண்ணீர் கிடைக்கும். இந்தத் திட்டத்தை என்னுடைய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், இவர்கள் திட்டத்தை மாற்றி வைத்திருக்கிறார்கள். இந்த திட்டம் குறித்து அறிக்கை கேட்டிருக்கிறேன்.
அதேபோல், பாலாற்றின் குறுக்கே எங்கெல்லாம் தடுப்பணை கட்ட முடியும் என்று அறிக்கை அளிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !