Tamilnadu

“கொரோனாவை புரிந்துகொள்ள தவறிய பிரதமர் மோடியே இரண்டாம் அலைக்கு பொறுப்பு” : ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

கொரோனா தொற்று என்றால் என்ன என மத்திய அரசுக்கு புரியவில்லை; புரிந்துகொள்ளவும் தவறிவிட்டது என ராகுல் காந்தி கடுமையாக விமர்மசித்துள்ளார்.

காணொலி காட்சி வாயிலாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா தொற்று என்றால் என்ன என மத்திய அரசுக்கு புரியவில்லை; புரிந்துகொள்ளவும் தவறிவிட்டது. கொரோனா இரண்டாம் அலை தாக்கும் என்று ஏற்கனவே நான் எச்சரித்தேன்.

ஆனால், எனது எச்சரிக்கையை மத்திய அரசு ஏளனம் செய்துவிட்டது. இப்போது வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்துக்கொண்டே செல்கிறது. முதல் அலை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இரண்டாம் அலைக்கு பிரதமர் மோடியே காரணம்.

நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருக்கும் மோடி, நிகழ்ச்சி நடந்தும் மேலாளர் போல் செயல்படுகிறார். நாட்டு மக்களாகிய எங்களுக்கு நிகழ்ச்சிகள் தேவையில்லை; உத்திகள் தான் தேவை. இந்தியாவின் கொரோனா உயிரிழப்பு விகிதம் தொடர்பாக உண்மையை வெளியிட வேண்டும். இந்த கொரோனா இரண்டாம் அலைக்கு பிரதமர் மோடியே பொறுப்பேற்கவேண்டும்.

அதுமட்டுமல்லாது, தடுப்பூசி தயாரிப்பில் தலைநகராக இந்தியா உள்ளது. ஆனால் பெரிய அளவில் நம் நாட்டு மக்களுக்கு இதனால் பயனில்லை. தடுப்பூசி மட்டுமே முழுமையான தீர்வாகும் என்பதனை பிரதமர் மோடி உணரவேண்டும்.

ஊரடங்கு, சமூக இடைவெளி ஆகியவை தற்காலிக தீர்வுகள் மட்டுமே. தடுப்பூசி உத்திகளுக்கு தீர்வுகாண வேண்டும். இல்லையெனில், இந்தியாவில் பல அலைகளாக கொரோனா தாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "பத்திரிகையாளர் இரா.ஜவகர் மறைவு முற்போக்கு சிந்தனை உலகிற்குப் பேரிழப்பு": முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!