Tamilnadu

”திருச்சியிலும் கார் ஆம்புலன்ஸ் சேவை விரைவில் துவங்கப்படும்” - அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மேலும் ஒருவாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளான காய்கறிகளை அந்தந்த பகுதிகளில் நடமாடும் வாகனம் மூலம் வழங்கத் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனைகயை இன்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் வேறு எந்தப் பணிகளையும் விட, கொரோனா தொற்றை ஒழிக்கும் பணிக்குத்தான் முன்னுரிமை கொடுத்து ஈடுபட்டு வருகிறார். கொரோனா நோயாளிகளுக்காக நாள்தோறும் புதிதாக படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

108 ஆம்புலன்ஸ் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி 250 கார்களை ஆம்புலன்ஸாக பயன்படுத்தும் சேவை தொடங்கியதைப்போல், திருச்சி மாவட்டத்திலும் கார் ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படும்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் 130 வண்டிகள் மூலம் 24 அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து பொருட்களை வாங்கிச் செல்லவேண்டும்." என்றார்.

இதனைத் தொடர்ந்து லால்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளையும், கொரோனா டுப்பூசி முகாம்களையும், வெற்றி விநாயகா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமையும் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின்குமார், எம்.பழனியாண்டி, ந.தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Also Read: “தமிழகம் வந்த கிரையோஜெனிக் கன்டெய்னர்கள்... ஆக்சிஜன் தேவை முழுமையாக தீரும்” : அமைச்சர் தங்கம் தென்னரசு