Tamilnadu

“ஊரடங்கு நீட்டிப்பு..?” - மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 35,579 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒருசில மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மாவட்டம் வாரியாக கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும், சிகிச்சை முறைகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார்.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழங்கு வங்க கடல் பகுதியில் நாளை உருவாக வாய்ப்பிருப்பதாக, இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய எச்சரிக்கை தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்திற்கு பிறகாக, நாளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மருத்துவ நிபுணர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நடைப்பெற உள்ளது. இந்த கூட்டங்களில் பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் ஊரடங்கை நீட்டிப்பது, கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காணொலி காட்சி தொடங்குவதற்கு முன்னதாக, கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளை முன்னிட்டு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உடன் பொதுத்துறை செயலாளர், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Also Read: “அரசு மருத்துவமனையில் தற்போது ஒரு நோயாளி கூட காத்திருக்கும் நிலை இல்லை”: அமைச்சர் சேகர்பாபு பேட்டி !