Tamilnadu

கொரோனாவில் இறந்தவரின் சடலங்களுக்கு மத்தியில் நோயாளிகளுக்கு சிகிச்சை : புதுச்சேரியில் அரங்கேறும் அவலம்!

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினந்தோறும் சுமார் இரண்டாயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கோவிட் மருத்துவமனையான கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏராளமான கொரோனோ பாதித்த நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாளொன்றுக்கு 30 பேருக்கு மேல் உயிரிழப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பிணவறையில் உடலை வைக்க கூட இடம் இல்லாத சூழல் உள்ளது.

இந்நிலையில் இன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை பெற்று வரும் வார்டில் கொரோனா பாதித்து சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த உடல்களை அங்கேயே மூடி கட்டி வைக்கப்பட்டுள்ளது. இது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக உயிரிழந்தவர்களின் உடலை அப்புறப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சிகிச்சை பெறும் மக்களை சந்திக்க சென்ற சுயேட்சை எம்.எல்.ஏ நேரு தனது ஆதரவாளர் மூலம் எடுத்து வெளியிட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மத்தியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் உடலை வைத்திருக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

Also Read: “ஊடகங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!