Tamilnadu
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய ஆளுநர்- தாராளமாக பங்களிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள்!
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு.
தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதி மூலமாகவோ நிவாரண உதவி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று வெளிநாடுவாழ் தமிழர்கள், தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சிகள் தொடங்கி பொதுமக்கள், மாணவர்கள் வரை நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தனது விருப்ப மானியத்திலிருந்து ரூ.1 கோடியும், தனது ஒரு மாத சம்பளத்தையும் வழங்குவதாகத் தெரிவித்தார். மரபுப்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று நிதியைப் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் முதன்மை தனி செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாம் அலையில் நிலவும் சிக்கலான சூழ்நிலையைச் சமாளிப்பதற்கும், ஒட்டுமொத்த மனித வாழ்க்கையையும் பாதுகாப்பதற்கும் தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தமிழக அரசின் பொறுப்பை ஏற்கும் ஒரு பகுதியாக, தமிழக ஆளுநர் தனது விருப்பப்படி மானியத்திலிருந்து ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார், மேலும் முதல்வரிடம் ஒரு மாத ஊதியத்தைத் தனது சொந்த பங்களிப்பாகவும் பொது நிவாரணத்துக்கு வழங்கினார்.
கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும், தமிழகத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் நிதி தேவைப்படுபவர்களுக்கு உதவவும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாகப் பங்களிக்க வேண்டும் என்றும் ஆளுநர் தமிழக மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!