Tamilnadu

வெறும் 10 நாட்களில் ஆக்ஸிஜன் வசதியுடன் தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணி தீவிரம்.. குவியும் பாராட்டு!

சேலம் மாவட்டத்தில் கொரனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சேலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சேலம் இரும்பாலை பகுதியில் புதியதாக ஆக்சிஜன் வசதியுடன் சுமார் 500 படுக்கைகள் வசதிகள் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இரும்பாலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இடத்தையும் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “சேலம் மாவட்டத்தில் தினமும் 600 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி தேவை அதிகமாக உள்ளது. இதனால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் ஒருபகுதியாக சேலம் இரும்பாலையில் 10 நாட்களுக்குள் தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணிகள் நிறைவடையும். இதற்கென 1000கிலோ வாட் மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறையினர் ஒருங்கிணைந்து மருத்துவமனை அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் படுக்கைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழகத்திலும் தடுப்பூசிகள் தயாரிக்கலாம் : வழிமுறைகளை சுட்டிக்காட்டி மோடி அரசுக்கு தி.மு.க MP கடிதம்!