Tamilnadu

சென்னையில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை எட்டக்கூடும் : சிறப்பு அதிகாரி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி வருவது மக்களை அச்சமடையச் செய்துள்ளது. மேலும் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் குவிந்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் லேசான அறிகுறி இருப்பவர்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

இந்நிலையில், சென்னை பல்லவன் சாலை அருகே இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொரோனா சிறப்பு அதிகாரி சித்திக், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு ஆகியோர் செய்தியார்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,"சென்னையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை தற்போது 32 ஆயிரமாக உள்ளது, இது 50 முதல் 60ஆயிரமாக உயரக்கூடும். சென்னையில் தற்போது 619 முன் களப்பணியாளர்கள் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாநகராட்சி பணியாளர்கள் 26 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், வீட்டு தனிமையில் இருப்பவர்களோ அவருடைய குடும்பத்தினரோ விதியை மீறி வெளியே வந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். மேலும் சென்னையில் அதிகப்படியான வேட்பாளர்கள் உள்ள கொளத்தூரில் 20 மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கையும், குறைந்தபட்ச வேட்பாளர்கள் உள்ள தி.நகர் தொகுதியில் 14 மணி நேரத்திலும் வாக்கு எண்ணிக்கை நிறைவடையக்கூடும்" எனத் தெரிவித்தனர்.

Also Read: திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் பிளான்ட் நிறுவ ஆகும் செலவு இவ்வளவுதானா? - விவரிக்கும் சி.ஐ.டி.யு