Tamilnadu

“கொரோனா தடுப்பூசிகளை வீணடித்ததில் முதலிடம்.. கொள்ளையில் கவனம் செலுத்திய அரசு” - உதயநிதி ஸ்டாலின் சாடல்!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் இருந்து 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மேலும், நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மே மாதம் முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான தடுப்பூசிகள் வீணாகி உள்ளன. இதுவரை 12.1% தடுப்பு மருந்துகள் தமிழ்நாட்டில் வீணாகி உள்ளன. கொரோனா தடுப்பு மருந்து குப்பிகளை திறந்தால் அத்தனை டோஸ்களையும் 4 மணி நேரத்திற்குள் செலுத்த வேண்டும்.

இல்லையெனில், அவற்றை பயன்படுத்த முடியாது. இப்படி தமிழ்நாட்டில் 12.1% சதவீத தடுப்பு மருந்துகள் வீணாகி உள்ளன. அதாவது, சுமார் 3 லட்சம் தடுப்பு மருந்துகள் தமிழகத்தில் வீணாகியுள்ளன. இந்தியாவிலேயே அதிகமான தடுப்பு மருந்துகள் தமிழகத்தில்தான் வீணடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அ.தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:

“போலியோ-மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை பொதுமக்களிடம் சேர்த்ததில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த தமிழகம், கொரோனா தடுப்பூசிகளை வீணடித்ததில் முதலிடத்தில் உள்ளது. ஏப்ரல் வரை நமக்கு அனுப்பப்பட்ட 54.28 லட்சம் தடுப்பூசிகளில் 12.10% வீணாகியுள்ளது.

தகவலறியும் உரிமைசட்டம் மூலம் மத்திய அரசு தந்த இத்தகவல், அடிமை அரசின் நிர்வாக குளறுபடியை காட்டுகிறது. கொரோனா தடுப்பூசிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை மக்களிடம் சேர்க்கும் பணியை ஒருங்கிணைக்காமல், இறுதிகட்ட கொள்ளை-போலி விளம்பரங்களில் கவனம் செலுத்தியதே இதற்கு காரணம்.

இப்படி மக்கள் மீது அக்கறையற்ற அடிமை அரசால், கொரோனா 2-ம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது. கொரோனா உயிரிழப்புகளுக்கும் சேதாரங்களுக்கும், கொள்ளையில் மட்டுமே கவனம் செலுத்திய அடிமைகளும்-அவர்களை ஆட்டுவிக்கும் ஆதிக்கவாதிகளுமே பொறுப்பு.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “தேர்தலில் வெற்றிபெறுவதற்காக நாட்டு மக்களை கொல்லவும் துணிந்துவிட்டீர்கள்” - அமைச்சரை விளாசிய சித்தார்த்!