Tamilnadu

சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் கடத்தல் : விழுப்புரத்தில் பரபரப்பு!

சென்னை வடபழனியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களான சிவன், ராஜேந்திரன், ராஜேஷ் கண்ணா, சம்பத் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் கார் மூலம் சென்று புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்காக உள்ள நிலங்களை பார்வையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள நிலத்தை நேற்று (ஏப்.,18) இரவு ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் பார்வையிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல்  திடீரென ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களான சிவன், ராஜேந்திரன் ஆகிய இருவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி தங்களது காரில் ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மற்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள், கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களை துப்பாக்கி முனையில் காரில் கடத்தி சென்ற கும்பலை பிடிக்க போலீசார் திவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் இருவர் துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பள்ளி மாணவனைக் குத்திக் கொலை செய்த இந்துத்வா கும்பல்... கேரளாவில் தொடரும் அரசியல் படுகொலைகள்!