Tamilnadu
மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள் : கடைசி நேரத்திலும் விவசாயிகள் மீது அக்கறை காட்டாத எடப்பாடி அரசு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடியின் போது விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய ஏதுவாக மாவட்டம் முழுவதும், சுமார் 500-க்கும் மேற்பட்டகொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்முதல் முடிந்தாலும், காலதாமதமாக சாகுபடிப் பணியை துவக்கிய பூதலூர் வட்டாரத்தில் தற்போது கொள்முதல் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன்படி பூதலூர், சித்திரைக்குடி, நந்தவனப்பட்டி, புதுக்கரியப்பட்டி, கண்டமங்கலம், கச்சமங்கலம், மருதகுடி, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வரும் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாக்க போதியளவு தார்ப்பாய்கள் இல்லாததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.
தற்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக அவ்வப்போது பரவலாக கோடை மழைபெய்து வருகிறது. இந்த மழையினால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் போது, அதற்குரிய இழப்பை கொள்முதல் பணியாளர்களே ஏற்க வேண்டிய சூழல் ஏற்படுவதால் பணியாளர்கள் கவலை கொள்கின்றனர்.
இதுகுறித்து கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறுகையில், பூதலூர் பகுதியில் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 6 ஆயிரத்திலிருந்து 13 ஆயிரம் மூட்டைகள் வரை தேங்கியுள்ளன. இந்த நெல் மூட்டைகளை பாதுகாக்க உரிய ஏற்பாடுகள் இல்லை. தற்போது மழை பெய்வதால் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணாகி வருகிறது.
இதனால் ஏற்படும் இழப்புகளை அபராதம் என்ற பெயரில் நாங்கள் கூடுதல் தொகையை செலுத்த வேண்டியுள்ளது. விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.19-க்கு கொள்முதல் செய்யும் நாங்கள், அபராதமாக கிலோவுக்கு ரூ.36-ஐ கட்டவேண்டியுள்ளது. கொள்முதல் நிலையத்தில் உள்ள மூட்டைகளை இயக்ககம் செய்யாமல், சேமிப்பு கிடங்குகளில் உள்ள மூட்டைகளுக்கு முன்னுரிமை கொடுத்து இயக்கப்படுவதால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன என்றனர்.
Also Read
-
‘ஊழலை ஒழிக்க வந்த உத்தமன்.. தவெக-வின் Party Fun மிரட்டல்கள்.. வைரலான வீடியோ.. தீவிர நடவடிக்கை தேவை!’
-
“தெரிந்தும் தெரியாதது போல் நாடக ஆட்சி நடத்துகிறீர்களா CM Sir?” : முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம்!
-
“நீட் தேர்வு ரத்துதான் நிரந்தரத் தீர்வு; அதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
இரண்டரை மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன்.. - முதல்வர் விஜயை விளாசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் தொடரும் போராட்டம்.. ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி.. கடும் தள்ளுமுள்ளு!