Tamilnadu

“மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் கட்டுப்பாடுகள் இன்னும் தீவிரமாகும்”- சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை!

தமிழகத்தில் குறைந்துவந்த கொரோனா வைரஸ் தொற்று ஒரு மாதமாக மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக அரசு கொரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை இன்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "கொரோனா தொற்று அதிகமாகப் பரவும் நிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனா கவனிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்பொழுது பரவிவரும் கொரோனா தொற்று உருமாறிய கொரொனாவாக பரவுகிறதா அல்லது மனிதர்களின் பழக்கவழக்கம் காரணமாகப் பரவுகிறதா என்று மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனாவால் ஏற்படும் இறப்பைத் தடுக்கவேண்டும் என்பதே முதல் குறிக்கோள். பொதுமக்கள் தீவிரத்தை உணர்ந்து முககவசம் அணிவதைக் கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். நாள் ஒன்றுக்கு 2 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 1.2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. மேலும் 18 லட்சம் தடுப்பூசி மருந்துகள் இருப்பு உள்ளது.

சென்னை, தேனி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 5.7% மேலாகத் தொற்று பரவி வருகிறது. தொற்று பரவலின் எண்ணிக்கை 5%க்கும் கீழாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தொற்று பரவலைப் புரிந்துகொண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் இரண்டாவது முறையாக கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருவது கொரோனா வைரஸ் 2வது அலையைக் குறிக்கிறது. இதனை யாரும் மறுப்பதற்கு இல்லை. எனவே பொதுமக்கள் கொரோனாவை தடுக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்படும்.

தமிழகத்தில் தடுப்பூசிக்கான விழிப்புணர்வு சற்று குறைவாக உள்ளது. இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தியபின்பே 24 நாட்கள் கழித்து உடலில் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நோய் எதிர்ப்புச் சக்தி தரக்கூடிய கபசுரகுடிநீர் போன்றவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “சென்னையில் அடுத்த இருபது நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்” : சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி!