Tamilnadu

“தி.மு.கவின் வெற்றியை பா.ஜ.கவின் கோழைத்தனமான சோதனைகளால் தடுக்க முடியாது” : தீக்கதிர் தலையங்கம் உறுதி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது. நாளுக்கு நாள் இந்த கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இதனால் இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாகவும் திகழ்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள பா.ஜ.க, தனது மத்திய அமைப்புகளை வைத்து இந்த கூட்டணியின் வெற்றியைப் பறித்து விடலாம் என்று கணக்குப் போடுகிறது.

மோடி அரசு வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் தன்னுடைய குறுகிய அரசியல் நலனுக்காகத் தவறாகப் பயன்படுத்துகிறது. பா.ஜ.க அரசை விமர்சிப்பவர்கள் மீது வருமானவரித்துறையை ஏவி விடுகிறது.

தமிழகத்தில் மட்டுமல்ல, தேர்தல் நடைபெறும் கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் தன்னை எதிர்க்கும் கட்சிகளைக் கொள்கை ரீதியாக எதிர்க்கத் துணிவற்ற பா.ஜ.க, கோழைத்தனமான முறையில் நடந்துகொள்கிறது.

கேரளாவில் அமலாக்க இயக்குநரகத்தை அம்மாநில இடது முன்னணி அரசுக்கு எதிராக பா.ஜ.க அரசு ஏவியது. குறிப்பாக இடது முன்னணி அரசுக்குத் தலைமை தாங்கும் முதலமைச்சர் பினராயி விஜயனின் மக்கள் செல்வாக்கைச் சீர்குலைக்க முயன்று தோல்வியைத் தழுவியது.

தமிழகத்தில் தி.மு.க முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலு வீடு, அலுவலகம், கல்லூரி ஆகிய இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அதில் அவர்கள் எதிர்பார்த்தது எதுவும் கிடைக்கவில்லை. உண்மையிலேயே வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கவேண்டும் என்ற எண்ணம் தேர்தல் ஆணையத்திற்கு இருந்தால் அ.தி.மு.க அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர், தங்கமணி, ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்த உத்தரவிட்டிருக்கவேண்டும்.

அமைச்சர்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தை தேர்தலில் ஆறாக பாய விடுகிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற 4 நாட்களே உள்ள நிலையில் பல இடங்களில் மத்திய ஆளுங்கட்சியான பா.ஜ.கவின் துணையுடன் அ.தி.மு.கவினர் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்குப் பகிரங்கமாகப் பண விநியோகம் செய்து வருகிறார்கள். அரசு அதிகாரிகளே இதற்குதுணை போகிறார்கள்.

இது குறித்து புகார் அளித்தும்தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, சென்னை அண்ணாநகரில் உள்ள தி.மு.க எம்.எல்.ஏ. மோகன் மகன்கார்த்தி, அரவக்குறிச்சி தி.மு.க வேட்பாளர் கருர்செந்தில் பாலாஜி ஆகியோரது வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியது அரசியல்உள்நோக்கம் கொண்டதாகும்.

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளநிலையில் இதுபோன்ற சோதனையின் பின்னணியை பொதுமக்கள் நன்கு அறிவர். அரசியல் ரீதியாகத் திட்டமிட்டு நடத்தப்படும் இத்தகைய சோதனைகளால் தி.மு.க கூட்டணியின் வெற்றியைப் பறித்து விடமுடியாது.

Also Read: “பணப்பட்டுவாடா செய்வதில் தகராறு” : பா.ஜ.க மாவட்ட தலைவரை அரிவாளால் வெட்டு முயன்ற அ.தி.மு.க நிர்வாகி !