Tamilnadu

“பா.ஜ.க, அ.தி.மு.க உட்பட ஆளுங்கட்சினரை வருமான வரித்துறை கண்டு கொள்ளாதது ஏன்?” : கே.பாலகிருஷ்ணன் கேள்வி!

பா.ஜ.க, அ.தி.மு.க, பா.ம.க உட்பட ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களை வருமான வரித்துறை கண்டு கொள்ளாதது வியப்பாக உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தோல்வி பயத்தின் காரணமாகவே இத்தகைய செயல்கள் நடத்தப்படுகின்றன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தி.மு.க வேட்பாளருமான திரு.எ.வ.வேலு அவர்களின் அலுவலகம், வீடு, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் உட்பட 18 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ‘ரெய்டு’ நடத்தி உள்ளனர்.

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க போட்டியிடும் நிலையில் தி.மு.க வேட்பாளராக எ.வ.வேலு அவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தியுள்ளது உள்நோக்கம் கொண்டது. அவருடைய பெயருக்கு களங்கம் உருவாக்குவதற்காக பா.ஜ.க இச்செயலை செய்கிறது என்பதை சுட்டிக்காட்ட விருமபுகிறோம்.

தேர்தல் நெருக்கத்தில் எதிர்க்கட்சியினரை மிரட்ட, அவர்களது செயல்பாடுகளை முடக்க வருமானவரித்துறை மத்திய அரசாங்கத்தின் ஏவல் கருவிகளாக செயல்படுவது மிகவும் கண்டனத்துக்குரியது. அதிலும் குறிப்பாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, குறி வைத்து சோதனை நடத்தப்படுபவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியின் பிரபல நபர்களாக உள்ளனர்.

அதேநேரத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க, பா.ம.க உட்பட ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களை வருமான வரித்துறை கண்டு கொள்ளாதது வியப்பாக உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தோல்வி பயத்தின் காரணமாகவே இத்தகைய செயல்கள் நடத்தப்படுகின்றன.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டிலும், வரி ஏய்ப்பு செய்பவர்களையும் - சட்டத்துக்குப் புறம்பாக பணம் சேர்ப்பவர்களையும் - அதை அரசியல் செயல்பாட்டுக்கு நாணயமற்ற முறையில் பயன்படுத்துபவர்களையும் - சட்டத்தின்படி சோதனையிட்டு வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளது.

ஆனால் தேர்தல் நேரத்தில் இதைச் செய்து, பா.ஜ.க தனது அரசியல் எதிரிகளை முடக்க இந்த ‘சோதனை ஆயுதத்தைப் பயன்படுத்துவது ஆபத்தான அணுகுமுறை’ எனக் கருதுகிறது. பாஜக அரசின் இந்த அணுகுமுறை ஜனநாயக செயல்பாட்டை முடக்குகிற உள்நோக்கம் கொண்ட அரசியல் தாக்குதல் ஆகும்.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தி.மு.க தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியை தடுத்து விடுவதற்கு பா.ஜ.க முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. எனவே, வெளிப்படையான, சமமான விளையாடுகிற தளம் அனைவருக்கும் அளிக்கப்படும் வகையில் மேற்கண்ட உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “படுதோல்வி பதற்றத்தால் எதிர்க்கட்சிகள் மீது வருமான வரித்துறையை ஏவும் பா.ஜ.க அரசு” : தீக்கதிர் தலையங்கம்!