Tamilnadu

அடிமை,அக்கிரமம்,ஏமாற்று: ஏன் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கக்கூடாது? எழுத்தாளர் முருகவேள் கூறும் உண்மைகள்

தமிழகத்தின் 16வது சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு தேர்தல் பரப்புரை பணிகள் தீவிரமடைந்துள்ளதோடு ஆளும் அதிமுக அரசுக்கும் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

இப்படி இருக்கையில் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் அதிமுக பாஜக கூட்டணிக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டு எழுத்தாளர் இரா.முருகவேள் முக்கியமான 5 கூறுகளை தெரிவித்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

1. அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவும், அரசு துறைகளை தனியாரிடம் விடவும் ஆலோசனைகள் அளிப்பதற்காக staff rationalization committee என்று ஒரு கமிட்டியை அமைத்து உள்ளது. இது செயல்படுத்தப்பட்டால் வருங்காலத்தில் பல்லாயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்காது. எனவே அதிமுக கட்சியானது வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம் என்று சொல்வது வியப்பூட்டுவதாக உள்ளது.

2. கல்வித் துறையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை அதிக பங்கெடுத்துக் கொள்ளும்படி அதிமுக அரசு அழைத்து உள்ளது. பல பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அரசு மக்களுக்கு கல்வி அளிக்கும் கடமையை செய்யாமல் NGO அமைப்புகளிடம் ஒப்படைப்பது கிராமப்புற, ஏழை, தலித் மாணவர்களுக்கு பேரிழப்பு ஆகும்.

3. கோவை குடிநீர் விநியோகத்தை சூயஸ் என்ற பன்னாட்டு அமைப்பிடம் கொடுத்து உள்ளது. மேலும் பல நகரங்களின் குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க இருப்பதாக செய்திகள் அடிபடுகிறது. இதை அதிமுக அரசு மிகவும் ரகசியமாக செய்துள்ளது. சட்டசபை, மாநகராட்சி அமைப்பு எதிலும் முன் வைக்காமல் தன்னிச்சையாக செயல்படுத்தி உள்ளது. மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும், அவர்கள் கருத்தைக் கேட்க வேண்டும் என்ற ஜனநாயக நெறிமுறையை அரசு கடுகளவும் பொருட்படுத்தவில்லை.

Also Read: “மிஸ்டர் பழனி, நாங்க சொல்லிக்கொடுத்தத மட்டும் பேசுங்க” : CAA பற்றி பேசி மூக்குடைபட்ட அ.தி.மு.க!

4. நகரங்களை விரிவுபடுத்தி அழகு படுத்தும் திட்டங்களுக்காக லட்சக்கணக்கான குடிசை பகுதி மக்களை, அதிமுக அரசு தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றி வருகிறது. அவர்களுக்கு அளிக்கப்படும் மாற்று இடங்களில் முறையான பஸ், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு போன்ற வசதிகள் அளிக்கப்படவில்லை. தவிர காடுகளில் இருந்து மக்களை வெளியேற்றும் மத்திய அரசின் முயற்சிக்கும் துணையாக உள்ளது.

5. ஜெயலலிதா இல்லாத நிலையில் தங்கள் அரசை தக்கவைக்க சாதி மத வெறி அமைப்புகளிடம் மென்மைப் போக்கைக் கடைப் பிடிக்கிறது. கிராமப்புறங்களோ, ஆணவ கொலை, பெண்கள் மீதான கொடூரமான வன்முறை என்று அராஜகத்தை நோக்கி நழுவிக் கொண்டுள்ளன.

ஒரு ஆளுங்கட்சியை அதன் தேர்தல் அறிக்கையைத் கொண்டு அல்ல, அதன் கடந்த கால செயல்பாடுகளைக் கொண்டே அளவிட வேண்டும். அதிமுக வழங்கியது மோசமான நிர்வாகம். கல்வி, குடிநீர், இருப்பிடம், வேலை அகியவற்றை மக்களுக்கு வழங்கும் கடமையை அரசு ஒவ்வொன்றாக கை கழுவி வருகிறது. இது அகற்றப் பட வேண்டும் எனில் மாற்று என்ன?

திமுக கூட்டணிக்கு வாக்களிப்பதே சரியானது என்று நினைக்கிறேன். மையம், அமமுக, நாதக போன்ற கட்சிகள் அதிமுக, பிஜேபி கட்சிகள் மேல் மென்மைப் போக்கைக் கடைப் பிடிக்கின்றன. இவை திமுகவையே பிரதான எதிரியாக கருதுகின்றன. இன்றைய சூழலில் இது அபத்தமானது ஆகும்.

Also Read: "234 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வாஷ் அவுட் ஆகப்போவது உறுதி” - திருவாரூரில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!