Tamilnadu

தவறான ஊசியால் அடுத்தடுத்து 2 பேர் மரணம் : சிவகங்கையில் அதிர்ச்சி - விசாரணை நடத்துமா சுகாதாரத்துறை?

சிவகங்கை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் திவ்யஸ்ரீ சிவகங்கையில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை திவ்யஸ்ரீக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திவ்யஸ்ரீயை கணேசன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவருக்குச் சிகிச்சை பார்த்த மருத்துவர், நரம்பில் ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட சில நிமிடங்களிலேயே திவ்யஸ்ரீ சுயநினைவை இழந்துள்ளார்.

இதையடுத்து, திவ்யஸ்ரீயை சிவகங்கை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் திவ்யஸ்ரீ ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டுப் பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இதையடுத்து, திவ்யஸ்ரீ உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Also Read: “தலைவலி எனச் சென்ற பெண் ஊசி போட்டபிறகு பலி” : தவறான ஊசி செலுத்தியதாக மருத்துவர் மீது உறவினர்கள் புகார்!

இந்நிலையில் தங்களது மகள் திவ்யஸ்ரீ மரணத்திற்கு, மருத்துவர்தான் காரணம் என சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் மாணவியின் தந்தை கணேசன் புகார் அளித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்ததால் அங்குப் பதற்றம் நிலவுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில், தவறான ஊசி போட்டதில் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், உடனடியாக சுகாதாரத்துறை இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Also Read: அமைச்சரின் தொகுதியில் தாராளமாக விநியோகிக்கப்படும் பரிசுப்பொருட்கள்... துணைபோகும் தேர்தல் அதிகாரிகள்!