Tamilnadu

மூடநம்பிக்கையின் உச்சம்: 5 வயது மகனை தீயிட்டுக் கொளுத்திய தந்தை.. திருவாரூரில் கோரச் சம்பவம்!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ராமையன் என்பவரது மகன் 29 வயதான ராம்கி. இவருக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணமாகி, தற்போது 5 வயதில் சாய் சரண் என்ற மகனும் சர்வேன் என்ற மூன்று மாத கை குழந்தையும் உள்ளனர்.

ஜோதிடம், மூட நம்பிக்கையில் மூழ்கிப்போன ராம்கி, அண்மையில் ஒரு ஜோதிடரிடம் சென்று ஜாதகம் பார்த்துள்ளார். அப்போது அந்த ஜோதிடர், “உங்களுடைய மூத்த மகனுக்கும் உங்களுக்கும் ஆகாது. உங்களது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இரண்டு பேரும் ஒன்றாக இருந்தால் ஒத்துப்போகாது” என கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டதில் இருந்து, தனது 5 வயது மகன் சாய் சரண் மீது வெறுப்புடன் இருந்துள்ளார் ராம்கி. அதோடு மகனை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், கோபமடைந்த ராம்கியின் மனைவி காயத்ரி, ஜோதிடம் ஜாதகத்தை எல்லாம் நம்ப வேண்டாம் என கணவரின் மோசமான செயலைக் கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி இடையே இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது மூட நம்பிக்கையால் மதியிழந்த ராம்கி, தனது மகன் சாய் சரண் மீது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதில், உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் சிறுவன் சாய் சரண் அலறித் துடித்திருக்கிறார்.

Also Read: மூடநம்பிக்கையால் இந்தியாவில் தொடரும் கொடூரங்கள் : கேரளாவில் 6 வயது குழந்தையை நரபலி கொடுத்த தாய்!

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனின் உடலின் மீது எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தனது 5 வயது மகனை ராம்கி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தது தெரிய வந்திருக்கிறது. பின்னர், மனைவி காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் நன்னிலம் காவல்துறையினர் ராம்கியின் மீது வழக்குப் பதிவு மன்னார்குடி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் 90 சதவிகித தீக்காயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சாய் சரண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மூடநம்பிக்கையால் தான் பெற்ற மகனையே தந்தை எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஜோதிடமும் மூட நம்பிக்கையும் ஒரு மனிதனை எந்த அளவுக்கு கொடூரமானவனாக மாற்றும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்.

Also Read: ஜோசியத்தை நம்பி பெற்ற மகனை எரித்த தந்தை: 51A(h) சட்டம் வெறும் ஏட்டு சுரைக்காயா? - கி.வீரமணி காட்டம்