Tamilnadu

தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி சில மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, சாதி வாரியான கணக்கீடு என்பது தமிழகத்தில் மட்டுமே உள்ளது என்றும், இதன் அடிப்படையில்தான் தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தது. மேலும், தமிழகத்தின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தமிழக அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாராஷ்டிரா ஓ.பி.சி இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நிலைவையில் உள்ளதால், அதனுடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவிகித இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும், மகாராஷ்டிரா வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியான பின்னர் தமிழக இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: “இடஒதுக்கீடு பெறுவோர் தகுதியற்றவர்களா? 80% மக்களை அவமதிக்கும் மோடி அரசு”  - துரைமுருகன் கடும் கண்டனம்!