Tamilnadu

ஜோசியத்தை நம்பி பெற்ற மகனை எரித்த தந்தை: 51A(h) சட்டம் வெறும் ஏட்டு சுரைக்காயா? - கி.வீரமணி காட்டம்

ஜோதிடத்தை நம்பி நான்கு வயது சொந்த மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த பைத்தியக்காரத் தந்தையின் வெறிச்செயலைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன அறிக்கை விடுத்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதன் விவரம் வருமாறு:

“திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்து வந்துள்ள ஒரு செய்தி நம் இதயத்தைப் பிழிகிறது. வெட்கமும், வேதனையும் விலா நோகச் செய்கிறது. பகுத்தறிவு பூமியாகிய தமிழ்நாட்டில் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் கூடவா, ஜோதிடத்தை நம்பிய ஒரு தந்தை தன் 4 வயது மகனான இளந்தளிரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ள கோர சம்பவம்?

தமிழ்நாட்டிற்கும், பகுத்தறிவாளர்களாகிய நம் அனைவருக்குமே தலைகுனிவை ஏற்படுத்தக் கூடியதாக இது உள்ளது! வன்மையான கண்டனத்திற்குரிய காட்டு மிராண்டித்தனமாகும்.

படிப்பறிவு பெருகியுள்ளது. எனினும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் வீச்சும் தேவையும் மேலும் பெருகி, அடைமழையாகப் பொழிந்து, இந்த மூடநம்பிக்கை நோயால் வறண்ட மூளைகளை வளப்படுத்த நமது பணி மேலும் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதையே இம்மாதிரி அவலச் செய்திகள் அறுதியிட்டு உறுதி கூறுவதாக அமைந்துள்ளன.

நமது அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவில் அறிவியல் மனப்பான்மையைப் பரப்புவதும் மூடத்தனத்திற்கு எதிராகவும், கேள்வி கேட்கும் உணர்வை வளர்த்து மனிதநேயத்தைப் பரப்பவேண்டும் என்பதும் இங்கே வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது.

தமிழக அரசு காவல்துறை இத்தகைய சம்பவங்களைத் தடுக்க, பகுத்தறிவுப் பிரச்சார அமைப்புகளுக்கு ஆதரவும், ஆக்கமும் ஊக்கமும் தர முன்வரவேண்டும். இன்னமும் ஜோதிடம் உயிரைக் குடிக்கும் கொடுமை நீடிப்பதா?” என ஆசிரியர் கி.வீரமணி வெகுண்டெழுந்துள்ளார்.