Tamilnadu

சாதிரீதியாக புறக்கணிக்கப்படுவதாக கண்ணீருடன் தெரிவித்த பெண்ணை ஆரத்தழுவி நம்பிக்கையூட்டிய கனிமொழி எம்.பி!

‘விடியலைத்தேடி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., சமீபத்தில் தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட ஏரியூரில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது ஏரியூர் பகுதியைச் சேர்ந்த அபிதா என்ற இளம்பெண், “இங்கு அனைவருமே ஜாதி பார்க்கின்றனர். உங்களுக்கு ஆரத்தி எடுத்தவர்கள் எல்லாம் மேல் ஜாதிக்காரர்கள் தான். கீழ் ஜாதிக்காரர்கள் யாரும் ஆரத்தி எடுக்கவில்லை. அது உங்களுக்கு தெரியுமா?” எனக் கண்ணீர் மல்க பேசினார்.

அதைக்கேட்டு மனமுருகி எழுந்து வந்த கனிமொழி எம்.பி., அபிதாவை ஆரத்தழுவி, அவரை தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறி அவரை தொடர்ந்து பேசும்படி கூறினார். கனிமொழியின் செயலால் நெகிழ்ந்த அங்கிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

தொடர்ந்து பேசிய அபிதா, “பட்டியலினத்தவர்களான எங்களுக்கு உரிய வேலைவாய்ப்பு இல்லை. எல்லாரும் குப்பை பொறுக்கும் வேலைக்கு செல்கின்றனர். நான் ப்ளஸ் 2 வரை படித்துள்ளேன். ஒரு வசதி, வாய்ப்பில்லை. எங்கள் அம்மாவிற்கு நான்கு பெண் குழந்தைகள். என் தந்தை இறந்து மூன்று மாதம் ஆகிறது” எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி., “ஒதுக்கப்படுகிறோம், ஒடுக்கப்படுகிறோம் என்ற அந்த உணர்வு, இங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு இன்னும் இருக்கிறது என்ற நிலை இருக்கும்போது, இன்னும் நம் பணியை அதிகமாகச் செய்ய வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது. இந்தக் கண்ணீரை துடைப்பதற்கு தொடர்ந்து பாடுபடுவோம்” என உறுதியளித்தார்.

இந்நிகழ்வு அங்கிருந்த மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான காணொளிக் காட்சியை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

Also Read: “அ.தி.மு.கவினர் தாக்கியதால் கரு கலைஞ்சு போச்சு” - முறையிட்ட பெண்ணுக்கு அண்ணனாக உறுதியளித்த மு.க.ஸ்டாலின்!