Tamilnadu

“மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் சுய உதவிக் குழுக்கள் மீட்டெடுக்கப்படும்” - கனிமொழி எம்.பி உறுதி!

தருமபுரியை அடுத்த பழைய தருமபுரி சமுதாயக் கூடத்தில் தி.மு.க மகளிர் அணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழி, மகளிர் சுய உதவிக் குழுவினரைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., பேசுகையில், “தருமபுரி மாவட்டம் அதகபாடி ஊராட்சியில் 1989-ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு எனச் சட்டம் கொண்டு வந்தவரும் அவர்தான். மகளிரின் சுய மரியாதையைக் காக்க தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு அ.தி.மு.க ஆட்சியில் சுழல் நிதி, மானியம் ஆகியவை வழங்கப்படுவதில்லை. இதனால், பொருளாதார நெருக்கடியால் தவிக்கின்றனர். மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்த உடன் சுய உதவிக் குழுக்கள் மீட்டெடுக்கப்படும்.

விவசாயப் பயிர்க்கடன் கடன் தள்ளுபடி மூலம் தமிழகத்தில் பயன்பெற்றவர்கள் அ.தி.மு.கவினர் மட்டுமே. ஏனெனில், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கூட்டுறவு வங்கிகளில் வேளாண் கடன்கள் வழங்கப்பட்டன.

அ.தி.மு.க ஆட்சியில் வேலைவாய்ப்புகள் எதுவுமே உருவாக்கப்படவில்லை. தருமபுரியில் சிப்காட் தொழிற்சாலை தொடங்கப்படாததால் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலை தேடி வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. தி.மு.க ஆட்சியில் தருமபுரி சிப்காட் மட்டுமன்றி தமிழகம் முழுக்கத் தொழில் வளம் உருவாக்கப்படும். அதன் மூலம் உள்ளூர் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.

கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். முதல்வரானவுடன் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.” எனப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி பேசுகையில், “தமிழகத்தில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் 85. ஆனால், உயர் கல்வி அமைச்சரின் மாவட்டமான தருமபுரியில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் 67. ஆட்சியாளர்கள் மக்களின் மீது எவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்பதை அறிய இது ஒன்றே போதும்.

குடிமராமத்துப் பணிகளில் கணக்கு மட்டுமே எழுதிவிட்டுப் பணிகளைச் செய்யாமல் விட்டுள்ளனர். நீர்நிலைகளை மூடிவிட்டு மனைகளாக்கி ஆளும் கட்சியினர் விற்றுள்ளனர். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் சட்டங்களை ஆதரிப்பவராக முதல்வர் பழனிசாமி இருக்கிறார்.

தமிழகத்தில் பல திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார். ஆனால், திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நாயகனாக மட்டுமே தமிழக முதல்வர் இருக்கிறார். பணிகள் எதுவும் நடப்பதே இல்லை.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் தொடர் விலையேற்றம் மக்களைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. இதனால், பெண்கள் விறகு அடுப்புக்கு மாறி மீண்டும் சிரமப்படுவர். விவசாயிகள் வாகனங்களுக்கு பதிலாக மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தும் நிலை உள்ளது.

உலக சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏறவே இல்லை. ஆனால், இந்தியாவில் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இதனால் அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் ஏறுகிறது. கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் மீது தொடர்ந்து இதுபோன்ற சுமைகள் சுமத்தப்படுகின்றன.

தி.மு.க அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும், அடுத்து அமையவுள்ள தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றித் தரப்படும். கனவு காணக்கூடிய உரிமை அனைவருக்கும் உள்ளது. அ.தி.மு.கவினர் வெற்றிக் குறித்து கனவு கண்டுகொண்டே இருக்கட்டும்.” எனத் தெரிவித்தார்.

Also Read: “சுயமரியாதை - சமூகநீதி - சமத்துவத்தை காக்கும் அரசாக தி.மு.க அரசு அமையும்”: மு.க.ஸ்டாலின் உறுதி!