Tamilnadu
நகைச்சீட்டு என்ற பெயரில் நூதன மோசடி : வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.40 கோடியை சுருட்டிய நகைக்கடை!
சென்னையில் தி.நகர், மயிலாப்பூர், அண்ணா நகர் ஆகிய மூன்று இடங்களில் கே.எஃப்.ஜே என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் பங்குதாரர்களாக சுஜீத் செரியன், அவரது மனைவி தானியா, சகோதர் சுனில் செரியன் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில், கே.எஃப்.ஜே நகைக்கடை, வாடிக்கையாளர்களுக்கான நகைச்சீட்டு முறை ஒன்றை அறிமுகம் செய்தது. இதை நம்பி பலர் நகைச்சீட்டு கட்டியுள்ளனர். பின்னர் சீட்டுக்கான தேதி முடிவடைந்ததும், நகை வாங்குதற்காக வாடிக்கையாளர்கள் கடைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, கடையில் இருந்தவர்கள், அண்ணாநகர் கடைக்குச் செல்லுங்கள் என்றும் அண்ணா நகர் சென்றால் தி.நகர் கடைக்குச் செல்லுங்கள் எனவும் வாடிக்கையாளர்களை அலைக்கழித்துள்ளனர். அப்போதுதான் நகைக்கடை நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நகைச்சீட்டு முறையில் வாடிக்கையாளர்கள் 40 கோடிக்கு மேல் பணம் கட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கே.எஃப்.ஜே நகைக்கடையால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால், காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர்.
பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அப்போது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்றும் பணத்தைக் கொடுத்து விடுவதாகவும் சுஜீத் செரியன், சுனில் செரியன் ஆகியோர் கூறியுள்ளனர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது நகைக்கடை உரிமையாளர்களைத் தேடி வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். கே.எஃப்.ஜே பங்குதாரர்களாக இருக்கும் சுஜீத் செரியன், தானியா, சுனில் செரியன் ஆகியோரின் சொத்துக்களை முடக்கி, அதிலிருந்து கிடைக்கும் பணத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருப்பி கொடுக்க வேண்டும் என பணத்தை இழந்தவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Also Read
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!