Tamilnadu
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அலட்சியம் : 25,000 தடுப்பூசி மருந்துகளை வீணாக்கிய எடப்பாடி அரசு!
சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பிறகு உலக நாடுகள் முழுவதும் பரவியது. பின்னர் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகளும் கொரோனா தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்து, தங்கள் நாட்டு மக்களுக்குச் செலுத்தி வருகின்றனர். இந்த வரிசையில், இந்தியாவும் கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற இரண்டு தடுப்பு மருந்துகளை முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில், கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாகப் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மருந்து செலுத்தும் பணியும் துவங்கியுள்ளது.
இந்நிலையில், முதல் கட்டமாகப் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி மருந்துகளில் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் ‘டோஸ்’ வீணாகியிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், “கொரோனா தடுப்பு மருந்து பாட்டில்களை ஒரு முறை திறந்துவிட்டால் அதை 4 மணி நேரத்திற்குள் 10 பயனாளிகளுக்கு போட வேண்டும். ஆனால், தடுப்பு மருந்து போட்டுக்கொள்ள 5 பயனாளிகள் மட்டுமே வருகிறார்கள். இதனால் மீதம் இருந்த 'டோஸ்கள்' வீணாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை உணராமல், பயனாளிகள் வராததால் தான் 25 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வீணாகிவிட்டதாக சுகாதாரத்துறை கூறும் பதில், தடுப்பூசி மருந்தை உரிய முறையில் பயன்படுத்தத் தவறிவிட்டது என்பதையே காட்டுகிறது.
மேலும், தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததும், கொரோனா தடுப்பூசி மருந்தை உரிய முறையில் பயன்படுத்தாமல் இருந்ததால் தான் 25 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வீணாகியிருப்பதாகவும், இதற்கு சுகாதாரத்துறையும், எடப்பாடி அரசுதான் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Also Read
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!