Tamilnadu
“M.Tech படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது நியாயமில்லை” - அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் கண்டனம்!
அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. இதை எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், உயிரி தொழில்நுட்பவியல் துறை இந்தியாவிலேயே முதன் முதலில் 1986ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டது. தற்போது 45 மாணவர்கள் வரை படித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 50 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-2021-ஆம் ஆண்டில் இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாகவும், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.டெக்., படிப்புகளுக்கு தமிழக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது,
இத்தனை ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை திடீரென ரத்து செய்தது ஏன் என எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் இதற்கான தேர்வை மத்திய அரசு நடத்தி தேர்வானவர்களின் தகுதி பட்டியலை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் என்றும், ஆனால் இந்த ஆண்டு மாணவர் தகுதி சேர்க்கையை, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தவேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளதாக தெரிவித்தார்.
அதனால் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த முடியவில்லை என்றும் கடந்த 35 ஆண்டுகளாக மத்திய அரசின் இட ஒதுக்கீடு முறையில் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கடந்த 35 ஆண்டுகளாக நடத்தப்பட்ட நிலையில், தற்போது என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பி இது நியாயமில்லை என கண்டனம் தெரிவித்தார். இந்தப் பிரச்சனையில் தமிழக அரசிடம் அண்ணாபல்கலைக்கழகம் ஆலோசித்து, பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
Also Read
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!