Tamilnadu

சாலையை சீரமைக்கக் கோரி கோவையில் ஆர்ப்பாட்டம் - ஆயிரக்கணக்கான தி.மு.கவினர் கைது!

கோவை மாநகராட்சி ஸ்ரீராம் நகர் இந்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கு சாலையில் இருந்து சத்தி சாலை வரை உள்ள சாலையை சீரமைக்கக் கோரி இன்று மாலை 4 மணியளவில், இந்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கு அருகில் பீளமேடு பகுதி கழகம் – 2 மற்றும் 40 வது வட்டக் கழகம் சார்பில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ தலைமையில் காவல்துறை தடையை மீறி, மக்களைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க அரசை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நா.கார்த்திக் எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பின், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது “கோவை மாநகராட்சி 40வது வட்டம், ஸ்ரீராம் நகர், இந்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கு சாலையில் இருந்து சத்தி சாலை வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு முற்றிலும் பயனற்ற வகையில் உள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக நான் தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தும் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் பலமுறை கடிதம் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கு நிறுவனத்திடமிருந்து தடையின்மைச் சான்று பெற்று, இந்த பகுதியில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கு மத்திய அரசுடன் கலந்து பேசி, அனுமதி பெற கடந்த பல ஆண்டுகளாக ஒரு சிறு முயற்சி கூட எடுக்காத அ.தி.மு.க அரசைக் கண்டித்தும், இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும், இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

கோவையில் பாதாள சாக்கடை கட்டுமானப்பணிகள், மேம்பால கட்டுமானப் பணிகள் முடங்கிக் கிடக்கிறது. கோவையில் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக பழுதடைந்துள்ளது. கோவை சுகாதார சீர்கேடு மிகுந்த நகரமாக உள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் நிர்வாக சீர்கேட்டினால் கோவை மாநகரமே சீரழிந்து விட்டது. கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் தி.மு.க சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

Also Read: “பழுதடைந்த அரசு இயந்திரம்; அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை வடிகட்டிய ஊழல்”: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!