Tamilnadu

“செவிலியர்கள் போராட்டம்: அடுத்த கட்டத்துக்கு செல்வதற்குள் அரசின் உடனடி தலையீடு தேவை” - முரசொலி தலையங்கம்!

சென்னையில் கடந்த ஜன.29ஆம் தேதி மெரினா கடற்கரை அருகிலுள்ள உழைப்பாளர் சிலையின் அணித்தேயும், பசுமைத் தீர்ப்பாயம் அலுவலகம் முன்பாகவும், இரவு சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் அருகேயும் செவிலியர்கள் (நர்சுகள்) பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆக, ஒருநாள் முழுமையும்அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செவிலியர்களின் முக்கியக் கோரிக்கைகள் என்ன? மருத்துவப்பணிகள் தேர்வாணையம் (Medical Services Recruitment Board) மூலம் 2015ஆம் ஆண்டு 13,000க்கு மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்குப் பின்னர் காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆறு ஆண்டுகள் ஆகியும் காலமுறை ஊதியம் 2,000 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதேபோல ஒப்பந்த அடிப்படையில் கொரோனாவிற்காகவும் 4000 செவிலியர்களை பணிக்கு அமர்த்தினர்.

முதலில் செவிலியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7500 என்று தொகுப்பூதியம் வழங்கினர். பிறகு செவிலியர்கள் போராடியதன் விளைவாக ரூ.14,000க்கு உயர்த்தி அறிவித்தனர். ஆனால், அதை நடைமுறைப்படுத்தவில்லை. பணிக்கேற்ற ஊதியம் செவிலியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதோடு இவர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

1. மத்திய அரசின் செவிலியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும்படிகள் வழங்க வேண்டும்.

2. கொரோனா தொற்றுக் காலத்தில் செவிலியர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியவர்களுக்கு ஒரு மாத ஊக்க ஊதியம் வழங்கப்படவேண்டும்.

3. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதியும், அரசு வேலையும் உடனடியாக வழங்க வேண்டும்.

4. கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரமாக்கவேண்டும். அதோடு தொகுப்பூதிய முறையை ரத்து செய்ய வேண்டும்.

5. மத்திய அரசில் பணியாற்றும் செவிலியர்கள்போல் 5 கட்ட கால முறை பதவி உயர்வு கொடுக்கப்பட வேண்டும்.

இப்படி செவிலியர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று இருக்கிறது என்பதை அரசு உணர வேண்டும். தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள், ஒப்பந்த அடிப்படையில் 14,201பேர் பணியாற்றுகின்றனர். நிரந்தர செவிலியர்களாக சுமார் 17,000 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து செவிலியர் பிரதிநிதிகளுடன் மருத்துவப்பணிகள் இயக்குநர் குருநாதன் முதல்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறார். இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

இதன் பிறகு பிற்பகலில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நிகழ்ந்தது. ‘இதில் முதற்கட்டமாகக் குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய நிதித்துறை ஒப்புதல் வேண்டும்’ என இராதாகிருஷ்ணன் தெரிவித்ததாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தார்கள்.

மருத்துவத்துறை இயக்குநரும், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளரும், செவிலியர் சங்கப் பிரதிநிதிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து இருக்கிறது. செவிலியர் போராட்டம் 3 நாள்களுக்கு ‘கறுப்பு பேட்ஜ்‘ அணிந்து பணியின் போதே நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அடுத்த கட்டத்திற்குச் செவிலியர்கள் சங்கத்தினர் போராட்டத்தை நகர்த்துவதற்குள் அரசு தலையீடு இதில் உடனடியாகத் தேவை என்று நாம் வற்புறுத்துகின்றோம். நாடு முழுவதும் 2000 கிளினிக்குகளை அரசு திறந்து இருக்கிறது. கொரோனா முற்றிலும் துடைத்தெறியப்படவில்லை. இன்னும் 5 ஆண்டுகளுக்கு அதன் வீச்சு இருந்துக்கொண்டே இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பெருந்தொற்று இல்லாத நிலையிலும் மக்கள் நால்வாழ்வுக்கென்று செவிலியர்கள் பணி மிகவும் இன்றியமையாதது ஆகும். அத்தகையவர்களின் கோரிக்கைகளை அரசு புறக்கணிக்கக் கூடாது. ‘செவிலியர்களின் பணியை தேவதைகளுக்கு ஒப்பிட்டுப் பேசப்படுவதில் எங்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது’ என ஒரு செவிலியர் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. சுகாதாரத்துறைச் செயலாளர் பேசியதாகக் குறிப்பிடப்படும் பேச்சில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை உடைய செவிலியர்களை முதல் கட்டமாக நிரந்தரமாக்கப்படும் என்பதாகச் சொல்லப்படுகிறது.

மீதமுள்ளவர்கள் பற்றி நிரந்தரமாக்க போதுமான நிதியைப்பெற நிதித்துறை சம்மதம் வேண்டும் என்பதாக சுகாதாரத்துறைச் செயலரின் பேச்சு அமைந்திருக்கக்கூடும். போராடுபவர்கள் வயிற்றுப் பாட்டைப் பார்ப்பவர்களாக இருப்பார்களே தவிர அரசின் துறை நிதி ஒப்புதலைப் பற்றி அவர்கள் நினைக்க முடியாது. அவற்றையெல்லாம் ஏற்பாடு செய்து அரசு ஊழியர்களை நிறைவுப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்றே நாம் கூற வருகின்றோம். சுகாதாரத்துறைச் செயலரும், மருத்துவப் பணிகளுக்கான இயக்குநரும் முதல்வர் எடப்பாடியையும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் சந்தித்து நிதி ஆதாரங்களை உருவாக்கித் திட்டமிட்டு, செவிலியர்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக்க வேண்டும். மீண்டும் செவிலியர்களை வீதியில் இறக்கிப் போராடச் செய்யாமல் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தரக் கேட்டுக்கொள்கின்றோம்.

Also Read: “செவிலியர்கள் கேட்பது பிச்சையல்ல; அவர்களது உரிமை..” பணி நிர்ந்தரம் செய்யாத அதிமுக அரசுக்கு வைகோ கண்டனம்!