Tamilnadu

மக்கள் நல திட்டங்கள் அனைத்தையும் கிடப்பில் போட்ட அரசு - அ.தி.மு.கவினரால் மதுரைக்கு ஏற்பட்ட அவலம்!

அ.தி.மு.க-வினரின் அதிகார மோதல்கள், உள்ளூர் அரசியல் குழப்பங்களால் மதுரையில் பல்வேறு நலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் முறையாக நடைபெற வைக்க இயலாத அ.தி.மு.க அமைச்சர்கள்தான் மதுரையை இரண்டாம் தலைநகராக்குவோம் என வெற்று வாக்குறுதி அளித்து வருகின்றனர்.

மதுரைக்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டுகளாக அடிக்கல் நாட்டப்பட்டதோடு நிற்கிறது. சமீபத்தில் ஆர்.டி.ஐ மூலம் கேட்ட கேள்விகளுக்கு, 'இன்னும் மாநில அரசு நிலத்தை ஒப்படைக்கவில்லை' என மத்திய அரசு தெரிவித்தது. இதை மாநில அரசு மறுத்தது.

இதற்கிடையே, மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு ரூ. 1264 கோடியிலிருந்து இரண்டாயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி மூலம் அம்பலமானது. ஆனால், இன்னும் வேலைதான் நடந்தபாடில்லை.

இதுபோக, பஸ் போர்ட், சமயநல்லூர்-உத்தங்குடி வரையிலான உள்வட்டச் சாலை, மோனோ ரயில் திட்டம், கோரிப்பாளையம் - பெரியார் பேருந்துநிலையம் இடையேயான பறக்கும் பாலம் உள்ளிட்ட பல திட்டங்கள் வெறும் அறிவிப்புடன், ஆரம்பகட்ட நிலையிலேயே நிற்கின்றன.

மதுரை அருகே விமானநிலையத்துக்கு இணையான வசதிகளுடன் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பஸ் போர்ட் திட்டத்துக்காக திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தில் 56 ஏக்கர் இடமும், திருப்பரங்குன்றம் தொகுதியிலுள்ள மேலக்குயில்குடியில் 54.69 ஏக்கர் இடமும், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகேயுள்ள மற்றொரு இடமும் ஆய்வு செய்யப்பட்டன. இடம் தேர்வு செய்வதில் அ.தி.மு.கவினரிடையே ஏற்பட்ட மோதல்களால் இந்தத் திட்டமும் சிறிதும் நகரவில்லை.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையும் மதுரையில் சரிவர நிறைவேற்றவில்லை. இப்படி, மதுரையின் வளர்ச்சிக்கான திட்டங்கள் அனைத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு, தேர்தலைக் குறிவைத்து பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் அ.தி.மு.க-வினர்.

Also Read: அரசை வழிநடத்தும் மு.க.ஸ்டாலின் : தி.மு.க தலைவரிடம் புகாரளித்த பெண்... பதறியடித்து நிவாரணம் வழங்கிய அரசு!