Tamilnadu

10வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு: ஜெ.மரண மர்மத்துடனே மூட்டையை கட்டும் அ.தி.மு.க அரசு?

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 24 ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 10 வது முறையாக 6 மாதம் காலநீட்டிப்பு செய்து  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் 2017ம் ஆண்டு செப்டம்பர்25 ம் தேதி விசாரணை ஆணையம்  அமைக்கப்பட்டது.  3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும்  தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 

இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என்று 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், மருத்துவ குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 90 சதவீத விசாரணையை ஆணையம் முடித்துள்ளதால் அப்பல்லோ கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பல்லோ உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில்   ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.  வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், 9 வது முறையாக  கொடுக்கப்பட்ட  3 மாத கால அவகாச நீட்டிப்பு ஜனவரி 24 ம் தேதியோடு முடிவடைந்துள்ளது. எனவே காலநீட்டிப்பு செய்ய ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியதை தொடர்ந்து 6 மாதங்கள் காலநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

கடந்த முறை காலநீட்டிப்பு கடிதத்தில் உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ தொடுத்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தாமதமாவதை அரசு வழக்கறிஞர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டியது ஆறுமுகசாமி ஆணையம்.

ஆனால் இன்னும் ஆணையத்தின் விசாரணைக்கான இடைக்கால தடை மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அ.தி.மு.கவின் ஆட்சியும் முடியவடையவுள்ளது. ஆனால் ஜெயலலிதா மரணத்தின் மர்மம் விலகவில்லை.

ஆணையத்தில் இறுதியாக,  கடந்த 2019 ஜனவரி 22 ம் தேதி தம்பிதுரையிடம் விசாரணை நேரடியாக  நடைபெற்றது. இதன் பின்பு   விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித்ததால், கடந்த 23 மாதங்களாக  விசாரணை நடைபெறாமலே தமிழக அரசு காலநீட்டிப்பு செய்து வருகிறது.

Also Read: உண்மைகள் வெளிவராமல் தடுக்கவே விசாரணை ஆணையமா? - 9வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு!