Tamilnadu

“ஃபிட்டர்-வெல்டர் பணிகளுக்கு மும்பையில் மட்டும் தேர்வுகளை நடத்துவதா?” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி, மும்பையில் மட்டும் எழுத்துத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பது தமிழகத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய படிப்புகளை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட பணியிடங்களுக்கு போட்டியிடுபவர்கள் பெரும்பாலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழை மாணவர்களை போட்டித் தேர்வு எழுத ஒரு முறை, நேர்காணலுக்கு ஒரு முறை என மும்பைக்கு சென்று தங்கி, தேர்வில் பங்கேற்பது பொருளாதார சவாலாகவே அமையும். எனவே, அந்தந்த மாநிலங்களில் தேர்வர்களின் வசதிற்கேற்ப தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “கல்பாக்கம் அணுமின் நிலைய ஃபிட்டர்-வெல்டர் பணிகளுக்கு ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கான தேர்வுகளை மும்பையில் மட்டும் நடத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்காக 2 முறை மும்பை செல்ல வேண்டுமென்ற அறிவிப்பாணையை படித்ததுமே இப்பணியே வேண்டாமென தமிழக இளைஞர்கள் விலகும் சூழல் உருவாகியுள்ளது.

ஐ.டி.ஐ & பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட இப்பணிகளுக்கான பயிற்சிக்கு எழுத்து தேர்வோடு நேர்காணலும் நடத்தப்படுவது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது. இத்தேர்வினை தமிழகத்தில் நடத்துவதோடு, இந்தப்பணிகள் தமிழக இளைஞர்களுக்கே கிடைக்க மத்திய-மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

Also Read: “தனது எஸ்டேட்டை காப்பாற்றிக்கொள்ள, குடிநீர் திட்டத்தை தடுக்கும் கே.பி.முனுசாமி” - மு.க.ஸ்டாலின் பேச்சு!