Tamilnadu

“அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஏழை மாணவர்கள் பயன்பெற உதவிய தி.மு.க தலைவருக்கு நன்றி” - வேல்முருகன் பேட்டி!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் பேசுகையில், “மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை காலதாமதமாக தமிழக அரசு அறிவித்தால் ஏழை மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் ஏழை மாணவர்கள் மருத்துவத்தில் சேர வாய்ப்பு கிடைக்காமல் போனது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த விவசாயி மகளான இலக்கியா மற்றும் தர்ஷினி ஆகியோருக்கு மருத்துவ இடம் கிடைக்காமல் இருந்தது. இந்த கோரிக்கையை தி.மு.க தலைவரிடம் தெரிவித்தோம். உடனடியாக தி.மு.க தலைவர் முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் மாவட்ட செயலாளர் மூலம் கடிதம் எழுதினார்.

பின்னர் தி.மு.க சார்பில் நீதிமன்றம் சென்ற பிறகே ஏழை மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. இலக்கியா மற்றும் தர்ஷினி இருவருக்கும் சென்னையில் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்த தி.மு.க தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், ‌வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் தான் கூட்டணி என உறுதிபடத் தெரிவித்தார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன்.

Also Read: “முதலீடுகளை ஈர்த்துவிட்டதாக, வேலைவாய்ப்பை அதிகரித்து விட்டதாக மக்களை ஏமாற்றும் பழனிசாமி” : மு.க.ஸ்டாலின்