Tamilnadu

தொடர் மழையால் சென்னையிலிருந்து உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் புறப்படுவதில் காலதாமதம்!

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து தொடா்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களின் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை காமராஜர் உள்நாட்டு விமான முனையத்தில் ஏரோபிரிட்ஜ் மூலமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் விமான சேவைகளில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ஏரோபிரிட்ஜ் இல்லாமல் பயணிகளை பிக்கப் பஸ்களில் ஏற்றிச் சென்று விமானங்களில் ஏற்றி அனுப்பக்கூடிய விமானங்கள் மட்டும் தாமதமாகப் புறப்பட்டு செல்கின்றன.

தொடா்மழை காரணமாக பயணிகள் பிக்கப் பஸ்களில் ஏறுவதும், லேடா்கள் வழியாக விமானத்தில் ஏறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இன்று பகல் 2 மணி வரை தூத்துக்குடி, பூனே, அகமதாபாத், திருவனந்தபுரம், பாட்னா, ஹூப்லி ஆகிய இடங்களுக்குச் செல்லும் 6 விமானங்கள் சுமாா் 30 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

அதேபோல் அறிஞர் அண்ணா சா்வதேச விமான முனையத்தில் விமானங்களில் லக்கேஜ்கள் ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் 3 சிறப்பு விமானங்கள் சுமாா் ஒரு மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டு சென்றன.

ஆனால் சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் உள்நாட்டு மற்றும் சா்வதேச முனையங்களில் குறித்த நேரத்திற்கு வந்து தரையிறங்கின என்பது குறிப்பிடத்தக்கது.