Tamilnadu
நீட் மதிப்பெண் பட்டியலில் முறைகேடு : மாணவியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைப்பு!
சென்னையில் மாணவி ஒருவர் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழில் மோசடி செய்து கலந்தாய்வில் கலந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 18ஆம் தேதிலிருந்நு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் கடந்த 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி தீக்ஷா என்பவர் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவரது சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்தபோது அவர் நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர் போலியான நீட் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. அவர் நீட் தேர்வில் 27 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். ஆனால் 610 எடுத்த ஹிர்த்திகா என்ற மாணவியின் பெயரில் உள்ள மதிப்பெண் பட்டியலை எடுத்து அதில் ஹர்த்திகாவின் புகைப்படத்தை எடுத்துவிட்டு தீக்ஷா வின் புகைப்படத்தை ஒட்டி இருப்பதும் தெரியவந்தது.
மேலும் ஹிர்த்திகாவின் மதிப்பெண் சான்றிதழில் உள்ள சீரியல் நம்பரை எடுத்து விட்டு, தீக்ஷாவின் சீரியல் நம்பரை போட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனர் செல்வராஜன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை பெரியமேடு போலிஸார் மாணவி தீக்ஷா மற்றும் மாணவியின் தந்தை பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் 420 ஏமாற்றுதல், 419- ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், 464- தவறான ஆவணத்தை உருவாக்குதல், 465- பொய்யான ஆவணத்தை பயன்படுத்துதல், 468- ஏமாற்றுவதற்காக போலி ஆவணங்கள் தயாரித்தல், 471- பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என குறி பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் செல்வராஜன் அளித்துள்ள புகாரில் மாணவி தீக்ஷாவின் சான்றிதழ்கள், மாணவி ஹிர்த்திகாவின் சான்றிதழ்கள் மற்றும் மற்றொரு மாணவியான மகாலட்சுமி என்பவரின் சான்றிதழ் ஆகியவற்றை போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பாக மாணவி மற்றும் அவரது தந்தையை விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாது குடும்பத்துடன் தலைமறைவாகினர். இந்நிலையில் மாணவியின் தந்தையை போலிஸார் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும் 11ம் தேதி வரை பாலச்சந்திரனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!