Tamilnadu
“வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பெண் பொறியாளரை மிரட்டிய ஆளுங்கட்சி பிரமுகர்” : கரூரில் அராஜகம்!
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2021 மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட உள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், கரூர் நகராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அங்கு முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் கடந்த சில நாட்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் பெங்களூர் பெல் நிறுவன பொறியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெல் நிறுவன பெண் பொறியாளர் ஒருவர் செல்போன் மூலம் தங்களது அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் செல்போனை பயன்படுத்தக் கூடாது என அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண் பொறியாளர் அதிர்ச்சியடைந்து அங்கிருந்த வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு மைய அதிகாரியிடம் புகார் அளித்துவிட்டு உடனடியாக அங்கி்ருந்து வெளியேறினார்.
இதையடுத்து இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொறியாளர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் சரிபார்ப்பு பணிகளை கைவிட்டு மையத்தை விட்டு வெளியேறினர். இதுகுறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு உடனடியாக மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேரடியாக வந்து மைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். ஆட்சியர் மலர்விழி பெண் பொறியாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க கட்சி நிர்வாகி வருண் குமாரிடம், வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு மையத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக அங்குள்ள அதிகாரிகள் மட்டும் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பொறியாளர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினார்.
இதையடுத்து இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி மீண்டும் தொடங்கியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் மலர்விழி கூறுகையில், “பெல் பொறியாளரிடம் செல்போன் இருந்துள்ளது. அ.தி.மு.க.வினர் அந்தப் பெண் பொறியாளரை மிரட்டியதால் அதிர்ச்சியடைந்து புகார் அளித்துவிட்டு வெளியேறிவிட்டார். இப்போது பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது” என்றார். இந்த முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பு இல்லாததால் எப்படியாவது குறுக்குவழியில் தேர்தலை சீர்குலைக்க அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கட்சிகள் திட்டமிடுவதாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
”தமிழ்நாட்டை உலகின் விளையாட்டு மையமாக மாற்றி வருகிறோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஜப்பான் தரத்துக்கு இணையானது” : டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!
-
தமிழ்நாட்டு வீரர் அ.மஹாராஜனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
Dominant செய்யும் திவ்யாவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்: Hotel டாஸ்கால் ஆஹா ஓஹோ என மாறிய BB வீடு!
-
“திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!