Tamilnadu

“விளை நிலத்தில் ராட்சத கிணறுகள் அமைத்து நீர் வளத்தை சூறையாடும் அதிமுக பிரமுகர்” : கரூர் விவசாயிகள் வேதனை!

கரூர் மாவட்டம் புலியூரை அடுத்து உள்ளது கட்டளை கிராமம். மாயனுாா் கதவணை பகுதியில் காவிரி மற்றும் அமராவதி ஆறு இணையும் இந்த கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நிலையில், கட்டளை பகுதியில் ஆற்றங்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தை 2 ஏக்கரை அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் வாங்கி அதில் ராட்சத கிணறுகள் வெட்டிள்ளார்.

மேலும் அதில் சுமார் 800 ஹெச்.பி மோட்டார் பொறுத்தி வெள்ளியணை பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரிடம் அப்பகுதி கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

அதனையடுத்து கிராம நிர்வாகி, அனுமதி இன்றி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என அ.தி.மு.க பிரமுகரை எச்சரித்து சென்றுள்ளார். ஆனாலும், அவற்றையும் மீறி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டிய அப்பகுதி விவசாயிகள் கட்டுமானப் பகுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் கூறுகையில், “காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லும் போது எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஏப்ரல், மே மாதங்களில் வறட்சி ஏற்படும் போது இந்த பகுதியில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால், கூட்டு குடிநீர் திட்டத்திற்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்.

எனவே இப்பகுதிகள் பாலைவனமாக மாறுவதற்குள் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் தலையிட்டு கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “காவிரி நீர் கடைமடைக்கு செல்லவிடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு” : தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!