Tamilnadu

“மாசுக்கட்டுப்பாடு அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்”: அமைச்சருக்கு தொடர்பா? - போலிஸ் விசாரணை!

நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கான, மாவட்ட சுற்றுச்சூழல்துறையும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளராக சென்னையைச் சேர்ந்த தனராஜ் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மாசுக்கட்டுப்பாடு அதிகாரி தனராஜ், திருவாளூர் பகுதியில் அரிசி ஆலை நடத்திவரும் துரைசாமி என்பவரிடம் ரூ.40 ஆயிரம் லட்சம் கேட்டதாக வெளியான புகாரை அடுத்து, லஞ்ச ஒழிப்பு போலிஸார் தனராஜை கைது செய்து திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, தனராஜ் தங்கியிருந்த வீடு மற்றும் உறவினர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.3 லட்சத்து 44 ஆயிரத்து 510 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும், தனராஜின் சென்னை ஊரப்பாக்கம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் நடத்திய சோதனையில், கட்டுக்கட்டாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டு என மொத்தம் 56 லட்சத்து 61 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகைகள், சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.

அதுமட்டுமல்லாது, பறிமுதல் செய்யப்பட்ட நோட்டில் 2 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் அளவிற்கு செல்லாத பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலிஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்பு துறையினர், தனராஜின் மனைவி, மகன் மற்றும் மகள் குடும்பத்தாரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தனராஜுக்கு அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுவதால் அதுதொடர்பாகவும் விசாரிக்கப்பட்டுகிறது. அதுமட்டுமல்லாது அந்த அமைச்சருக்கும், அவரின் உயர் அதிகாரிகளுக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் லஞ்சம் வாங்கி பிரித்துக் கொடுத்தாக கூறப்படுகிறது.

இதனால் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக வாங்கி வைத்திருந்தாரா அல்லது அவர்களுக்கு கொடுத்ததுபோக மீதம் உள்ள பணத்தை வீட்டில் வைத்திருந்தாரா என்பது குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற்றால், ஆளும் கட்சி எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் சிக்குவார்கள் எனவே அரசு இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “அரசுடனான பேச்சுவார்த்தை தடைபட்டதற்கு அமித்ஷாவே காரணம்” - விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!