Tamilnadu

“120 ரூபாய் ஸ்டிக்கர் தற்போது 700 ரூபாய்; அ.தி.மு.கவின் மாபெரும் ஊழல்” - ஆட்டோ ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு!

அனைத்து ஆட்டோக்களிலும் ஜி.பி.எஸ் கருவிகளை அரசே இலவசமாக பொருத்தவேண்டும் என ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கிண்டியில் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் பேசிய பாலசுப்பிரமணியம், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 14-ம் தேதி ஆட்டோ ஓட்டுனர்கள் சென்னையில் தபால் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என அறிவித்தார்.

தொடர்ந்து, பேசிய ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர், “120 ரூபாய்க்கு ஓட்டப்பட்ட ஸ்டிக்கர் தற்போது 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களின் ஸ்டிக்கரைத்தான் ஒட்டவேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் தொழிற்சங்கத்தினர் முறையிட்ட பின்னர் தற்போது 270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது” எனல் குற்றஞ்சாட்டினர்.

மேலும், அனைத்து ஆட்டோக்களிலும் ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்த வேண்டும் கட்டாயப்படுத்துகின்றனர். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் நிதி ஒதுக்கி இலவசமாக பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க அரசு ஜி.பி.எஸ் கருவிகளை இலவசமாக பொருத்தித்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்தி பராமரித்து கண்காணிப்பதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர்.

நீதிமன்றம் ஜி.பி.எஸ் கருவிகளை ஆட்டோக்களில் பொருத்த இடைக்கால தடை விதித்துள்ளது. ஆனால் ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு சென்றால் ரிஃப்ளெக்டர், ஸ்டிக்கர் மற்றும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தினால்தான் எஃப்.சி வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது என தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர்.

இந்தப் பிரச்னைகள் குறித்து அரசு ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: போராட்டத்தில் இதுவரை 15 விவசாயிகள் பலி : “இன்னும் எத்தனை தியாகங்களைச் செய்யவேண்டும்?” - ராகுல் கேள்வி!