Tamilnadu

BYJU’S நிறுவனம் பேரில் பண மோசடி.. காசோலை பெற முயன்ற நால்வர்.. வலைவீசி கைது செய்த தனிப்படை போலிஸ்!

இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு எளிய முறையில் பள்ளிப் பாடங்களை இணையவழியில் கற்பித்து வரும் பைஜுஸ் (BYJU's) நிறுவனம் சென்னையில் ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரியான சிவானந்த கிருஷ்ணன் என்பவர் அண்ணாசாலை காவல் நிலையத்தில் கடந்த 8 ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.

அதில், புனே, சத்தீஸ்கர் உள்பட பல்வேறு பகுதிகளில் நிறுவனரின் போலியான கையெழுத்தை பயன்படுத்தி காசோலைகள் மூலம் பல்வேறு வங்கிகளில் பணம் எடுக்க முயற்சி நடைபெற்றுள்ளது எனவும், அதேபோல நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் தங்களது நிறுவனத்தின் முத்திரை பதித்த கடிதம் மூலம் காசோலை புத்தகம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டு, காசோலை புத்தகம் கேட்டு விண்ணப்பித்தவர்கள் மீது சந்தேகம் இருப்பதால் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புகாரில் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் உயரதிகாரிகள் உத்தரவுப்படி, அண்ணாசாலை காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ரகசிய புலனாய்வு தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக நிறுவனத்தின் கடிதம் போலி என கண்டறிந்த வங்கி மேலாளரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அயனாவரத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவர்தான் காசோலை புத்தகம் பெற வந்தவர் என அடையாளம் காணப்பட்டது. முத்துராஜை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், தன்னை ரவிக்குமார் மற்றும் பாலதண்டாயுதபாணி ஆகியோர் கடிதம் கொடுத்து அனுப்பியதாகவும் அதற்கு மேல் தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவ்விருவரையும் பிடிக்க தனிப்படையினர் வலை விரித்தனர். அதன்படி, திருவல்லிக்கேணி சி.என்.கிருஷ்ணசாமி தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தவர்களை நோட்டம் விட்டு சரியான தருணத்தில் தப்பிச் செல்லாமல் மடக்கிப்பிடித்தனர். பின்னர் 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், இணைய வழி கல்வி நிறுவன கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது, நிறுவனர் கையெழுத்து எப்படி இருக்கும், நிறுவனத்தின் முத்திரை இட்ட கடித விவரங்கள் ஆகியவற்றை ஏற்கனவே நுங்கம்பாக்கம் தனியார் வங்கியில் பணியாற்றிய மருதுபாண்டி என்பவர் கொடுத்து காசோலை புத்தகம் பெற திட்டம் தீட்டியதாகவும், அதன்படி, காசோலை கிடைத்தால் நிறுவனரின் கையெழுத்து போட்டு பணம் சுருட்டலாம் எனக்கூறி மூளையாக மருதுபாண்டி செயல்பட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து மருதுபாண்டியும் கைது செய்யப்பட்டு 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் முத்துராஜ், ரவிக்குமார், பாலதண்டாயுதபாணி மற்றும் மருதுபாண்டி ஆகிய 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர் .

Also Read: மக்களே உஷார்.. வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிப்பு: 92,000 ரூபாய் பறிமுதல் - 3 பேர் கைது!