Tamilnadu

“முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதில் தரக்குறைவானது” - திருமாவளவன் கண்டனம்!

மத்திய பா.ஜ.க அரசின் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வேலூர் மாவட்டம் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது : “ஆளும் பா.ஜ.க அரசு பெரும்பான்மையை வைத்து விவசாயிகளுக்கு எதிராக மூன்று சட்டங்களை இயற்றியுள்ளது. விவசாயிகளுக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும். இந்தியா முழுவதிலும் விவசாயிகள் குழந்தைகளுடன் குடும்பமாக பனியிலும் வெயிலிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் மோடி அரசு தன்னுடைய பிடிவாதத்தில் இருந்து இன்னும் பின்வாங்கவில்லை.

வருகின்ற 14ஆம் தேதி பா.ஜ.க அலுவலகங்களின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு ஆதரவு தெரிவிப்போம்.

மோடி அரசு ஒருபுறம் சனாதனத்தை நிலைநாட்டவும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவைகளை செய்யும் வகையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் மோடி அரசு மக்கள் விரோத அரசாக உள்ளது.

பெரும்பான்மை இந்து மக்களின் கட்சி எனச் சொல்லிக்கொள்ளும் இந்த மோடி அரசு விவசாயிகளுக்கு துரோகம் விளைவிப்பதை, இந்து சமூகத்தை சார்ந்த மக்கள் இன்றாவது உணர்ந்துகொள்ள வேண்டும். மோடி அரசு ஒரு இந்து விரோத அரசு; விவசாய விரோத அரசு. உடனடியாக மோடி அரசு இந்த மூன்று சட்டங்களையும் நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்தச் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறுவது கூட்டணிக்காக பேசுகின்ற பேச்சு. ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளையும் பாதிக்கும் சட்டம்தான் இந்தச் சட்டம்.

மோடி அரசு திட்டமிட்டு 60 லட்சம் மாணவர்களின் படிப்புக்கான உதவித்தொகையை நிறுத்தியுள்ளது. இது அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களையும் பாதிக்கும். ஆனால் தமிழக அரசு இதனைப் பொருட்படுத்தவில்லை.

அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விவாதம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்த ஆ.ராசா அவர்களுக்கு பதில் சொல்கின்ற வகையில், முதல்வர் சொன்ன கருத்து அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. மிகவும் பொறுப்புமிக்க பதவியில் இருக்கக்கூடிய முதல்வர் ஆ.ராசாவை பார்த்து என்னோடு விவாதிக்க அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை அவர் என்ன பெரிய ஆளா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் அப்படிச் சொன்னதற்கு என்ன பொருள் என்று விளங்கவில்லை. இது அவருடைய தகுதியை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது வேதனைக்குரியது; கண்டனத்துக்குரியது.” எனத் தெரிவித்தார்.

Also Read: “ரூ.312 கோடி மாநகராட்சி பணத்தை அபகரித்த அ.தி.மு.க” - ஆதாரங்களுடன் மா.சுப்பிரமணியன் MLA குற்றச்சாட்டு!