Tamilnadu

“RGCB ஆராய்ச்சி மையத்திற்கு கோல்வால்கர் பெயர் வைப்பதா?”: கேரள முதல்வர் - அறிவியல் அமைப்புகள் கண்டனம்!

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, ஆட்சி அதிகாரித்திற்கு வந்ததில் இருந்தே, இந்துத்வா சித்தாந்தங்களை நாட்டு மக்களிடையே திணிக்கும் வேளையை மும்பரமாக செய்து வருகிறது. குறிப்பாக இந்தி திணிப்பு, சம்ஸ்கிருத திணிப்பு, பாடத்திட்டத்தில் இருந்து, சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களை இருட்டடிப்பு செய்வது என பலவற்றைத் தொடர்ந்து செய்து வருகிறது.

அதுமட்டுமல்லாது, பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மக்கள் நல திட்டங்களில், அதன் பெயரை மாற்றி, அந்த திட்டங்களுக்கு பா.ஜ.க தலைவர்களின் பெயர்களை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி தற்போது, கேரளாவில் உள்ள ராஜீவ் காந்தி உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கு கோல்வால்கர் பெயரை சூட்டும் முடிவிற்கு மத்திய பா.ஜ.க அரசு வந்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த ஆர்.ஜி.சி.பி-யின் இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் கலந்துக்கொண்ட ஹர்ஷவர்தன், “திருவனந்தபுரம் ராஜீவ் காந்தி உயிரித் தொழில்நுட்ப மையத்தில் (Rajiv Gandhi Centre for Biotechnology) துவங்க உள்ள புதிய சென்டருக்கு “ஸ்ரீ குருஜி மாதவ சதாசிவ கோல்வால்கர் உயிரித் தொழில்நுட்ப மையம் அண்ட் பார் காம்ப்ளக்ஸ் டி.சி.ஸ் கேன்சர் அண்ட் வைரல் இன்பெக்‌ஷன்” (Shri Guruji Madhav Sadashiv Golwalkar National Centre for Complex Disease in Cancer and Viral Infection) என பெயர் சூட்டப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு கேரளமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் பெயர் மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு, கேரள முதல்வர் பினராயி வியஜன் எழுதிய கடித்ததில், “திருவனந்தபுரம் ஆக்குளத்தில் உள்ள ராஜீவ் காந்தி உயிரித்தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் (ஆர்.ஜி.சி.பி) புதிய சென்டருக்கு, ”ஸ்ரீ குருஜி மாதவ சதாசிவ கோல்வால்கர் உயிரித் தொழில்நுட்ப மையம்” என பெயர் மாற்றப்போகும் தகவலை ஊடங்கள் மூலம் அறிந்தேன்.

மாநில அரசால் நடத்தப்பட்ட இந்த மையம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியின் மூலம் சர்வதேச தரத்தை அடையும் என்பதால் மட்டுமே மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. எனவே கோல்வால்கர் பெயர் மாற்றும் முடிவை விட்டுவிட்டு, இந்திய நாட்டின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் பெயரைத் தேர்வு செய்து இந்த சென்டருக்கு வைத்து, சர்ச்சைகளை தவிக்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து தற்போது, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “மத்திய அரசு, திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி உயிரித்தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் ஆர் எஸ் எஸ் ஸ்தாபகர் கோல்வால்கர் பெயரில் மற்றொரு மையத்தை திறக்க உள்ளதாக அறிகிறோம்.

இந்த நவீன அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கு, நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை மேலை நாட்டுத் தொழில் நுட்பம் என கேலி பேசியவர் பெயரை வைப்பது வேடிக்கையாக உள்ளது.

மேலும் கோல்வால்கரின் வாரிசுகள் கௌவர்கள் பிறப்பினை திசு வளர்ப்பு படியாக்கத் தொழில்நுட்பம் என்றும் கர்ணனின் பிறப்பை கருப்பைக்கு வெளியே கருத்தரித்து பிறந்த தொழில்நுட்பம் எனவும் போலி அறிவியலைப் பிதற்றுகின்ற நேரத்தில் இது போன்ற நவீன அறிவியல் தொழில்நுட்ப மையங்கள் போலி அறிவியலின் பிறப்பிடமாக ஆகி விடக் கூடாது.

இது வரை பண்டைய நகரங்களை உருவாக்கிய இஸ்லாமியர்களின் பெயரில் உள்ள நகரங்களை இந்துத்வா வழியில் மாற்றி மார்தட்டிக் கொள்ளும் வழியில் நவீன அறிவியல் தொழில்நுட்ப மையங்களை நவீன அறிவியல் தொழில்நுட்பத்திற்கு எதிரானவர்கள் பெயரை வைப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

இதனை தற்போதைய கேரள அரசும் அதன் எதிர்க்கட்சியும் எதிர்த்துள்ள சூழ்நிலையில் அவர்களின் கருத்தையையும் ஏற்றுக் கொண்டு கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். தற்போது செயல்படும் ராஜீவ் காந்தி உயிரித் தொழில்நுட்ப மையத்தில் துவங்க உள்ள மையத்திற்கு அதே பெயரைத் தொடர்வதும் சில நிர்வாகக் காரணங்களுக்காக தேவைப்படின் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியின் பெயரை வைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: புயல், மழையால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய மு.க.ஸ்டாலின்!