Tamilnadu

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் எடப்பாடி அரசின் ஊழல்களை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் : ஐ.பெரியசாமி

2021ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் தி.மு.க தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது.

அதன்படி, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ சுற்றுப்பயணத்தை தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ திண்டுக்கல் ஒன்றியத்தில் இன்று துவக்கினார்.

திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகோட்டை பகுதியில் வயல் வெளிகளில் வேலை பார்த்துவந்த பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார் அதனைத் தொடர்ந்து பெரியகோட்டை ஊருக்குச் சென்றார். அப்பொழுது பொதுமக்கள் அவருக்கு மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை மற்றும் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து அங்கு கூடியிருந்த விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து சீலப்பாடி தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் வேலைசெய்து வரும் பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி  சிந்திக்காத அ.தி.மு.க அரசுக்கு மக்கள் மத்தியில் வாக்குகள் கேட்க என்ன உரிமை இருக்கிறது?

ஏழை எளிய மக்கள் கொரோனாவால் இறந்தார்கள். அதை எட்டிக்கூடப் பார்க்காத அ.தி.மு.கவுக்கு மக்களிடம் வாக்குக் கேட்க என்ன உரிமை இருக்கிறது? வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியினர் மக்களிடத்தில் பணத்தைக் கொடுத்து வாக்குகளை பெற்று விடலாம் என நினைக்கிறார்கள். அது நடக்கவே நடக்காது.

மக்களுக்கு நன்றாகவே தெரியும். மக்களுக்காக உழைக்கக்கூடிய கட்சி எது என்று. ஆகவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றும். அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி கைப்பற்றும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பார்.

கொரோனா பரிசோதனை கருவிகள் வாங்குவதில் ஊழல் செய்து கொள்ளையடித்த ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி. ஆட்டு கொட்டகை, மாட்டு கொட்டகை போட்டது என அனைத்திலும் ஊழல் லஞ்சம், அரசுப் பேருந்தில் ஸ்டிக்கர் ஒட்டியதில் ஊழல், இதற்கு எல்லாம் தி.மு.க ஆட்சி வந்த பின்பு விசாரணை கமிஷன் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Also Read: “அ.தி.மு.க அரசால் முடக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்படும்”: ஐ.லியோனி உறுதி!