Tamilnadu

இந்தியாவில் ஒரே நாளில் 43,052 பேர் பாதிப்பு - தற்போது 4,55,555 பேருக்கு கொரோனா சிகிச்சை ! #COVID19

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 43,052 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 93,09,787 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரே நாளில் 492 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,35,715 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 39,379 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை87,18,517 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 4,55,555 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 93.65% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.46% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.89% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 11,31,204 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 13,70,62,749 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக மோடி அரசின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். ஆனால், கடந்த 5 நாட்களில் மட்டும் கொரோனா தொற்றால் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: ஒருபுறம் புயல் பாதிப்பு; மறுபுறம் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: பேரிடரிலும் கல்லா கட்ட துடிக்கும் மோடி அரசு