Tamilnadu
சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் புகார்.. அண்ணா பல்கலைக்கு நோட்டீஸ் அனுப்ப விசாரணை ஆணையம் முடிவு!
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்த ரூ.280 கோடி ஊழல் புகார் உள்ளிட்ட பல்வேறு புகார்களை, விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
விசாரணை ஆணைய அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரன் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். ஆணையத்துக்கு, உயர்கல்வி துணைச் செயலாளர் சங்கீதா, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு எஸ்.பி., பொன்னி, உயர்நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர் சாய்பிரசாத், ஓய்வு பெற்ற நிதித்துறை கூடுதல் செயலாளர் முத்து ஆகிய 5 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதனிடையே, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஆணைய அலுவலகத்தில், உறுப்பினர்களுடன் ஆணைய அதிகாரி கலையரசன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் உயர்நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயனைத் தவிர பிற நால்வரும் கலந்துகொண்டனர்.
சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் அனுப்பி புகார்கள் சம்மந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க கோருவது என்று முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதலில் சூரப்பா மீதும், பல்கலைக்கழக அதிகாரிகள் மீதும் புகார் தெரிவித்தவர்களிடம் விசாரணை நடத்தவும் பின் தேவைப்பட்டால் சூரப்பாவுக்கு சம்மன் அனுப்பலாம் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சூரப்பா மீது புகார் தெரிவிக்க ஏதுவாக மின்னஞ்சல் முகவரியை ஆணையம் வெளியிட்டுள்ளது. inquirycomn.vc.annauniv@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார்களை உரிய ஆதாரங்களுடன் அனுப்பி வைக்கலாம் என்று ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், Enquiry Authority against VC Anna University, Podhigai Valagam, Kumarasamy Raja Salai, Greenways Road, Chennai - 28 என்ற அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவும் உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கலாம் என்று ஆணையம் அறிவித்துள்ளது.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!