Tamilnadu

உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம்: பாஜகவுக்கு ஒரு நீதி.. திமுகவுக்கு ஒரு நீதியா? டி.ஆர்.பாலு கேள்வி!

தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்காமல் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவது தொடர்பாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் காவல்துறை டி.ஜி.பி.ஐ நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது தி.மு.க. பொருளாளரும் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி பேசியதன் விவரம் பின்வருமாறு:-

தி.மு.கழகத்தின் ஆணைப்படி இரண்டு மூன்று நாட்களாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், காவல்துறையினர் அவர்களை பல மணி நேரம் காக்க வைத்து கைது நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.

பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் வேல் யாத்திரை நடத்துகிறார்கள். அவர்களை கைது செய்கிறார்கள். அவர்களை உடனடியாக விட்டுவிடுகிறார்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலினை பல மணி நேரம் காக்க வைக்கின்றனர். கைது என்பது கழகத்திற்கு புதிதல்ல. அராஜக ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

Also Read: “தி.மு.கவின் சாதனைகள் இதோ.. பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?”- அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி!

உதயநிதிக்கு நடக்கும் கொடுமைகளை பார்த்துக் கொண்டு எங்களால் இருக்க முடியவில்லை. அதனால் தான் டிஜிபி யை சந்தித்தோம். பாஜகவுக்கு ஒரு நியதி, திமுகவிற்கு ஒரு நியதியா? அமித்ஷா வந்த போது சமூக இடைவெளி பின்பற்றப்பட்டதா?

எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் அதிமுகவினரால் அழைத்து வரப்பட்டு கூட்டம் சேர்க்கப்படுகிறது. அப்போது சமூக இடைவெளி இல்லாமல் இருக்கிறது. ஆனால் காவல்துறையினர் கைக்கட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.

கதவை தட்டியுள்ளோம் முறையான நடவடிக்கை இல்லை என்றால், திமுக உயர்மட்டக்குழு கூடி இது குறித்து பேசி ஆலோசனை எடுப்போம். தேர்தல் பரப்புரையை தடுப்பது சட்டப்படி குற்றம். தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம். காவல் துறையினரை தான் குற்றம் கூற வேண்டும். காவல் துறையினர் முதுகெலும்பில்லாமல் அதிகாரவர்க்கத்திற்கு உடன் செல்கின்றனர்.” என டி.ஆர்.பாலு காட்டமாக பேசியுள்ளார்.

Also Read: “தூங்கும் அரசை எழுப்பும் தி.மு.க-வின் போர்க்குரல்”: உடன்பிறப்புகளுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்!