Tamilnadu

“கல்லூரி அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது” - உயர் நீதிமன்றத்தில் UGC திட்டவட்ட பதில்!

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளில் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், அரியர் தேர்வுகளை ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது. பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில், இறுதி பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் எனவும், இறுதி பருவ மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தப்போது அரியர் தேர்வுகள் ரத்து விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பதில் மனுவில் தமிழக அரசின் ரத்து அறிவிப்பு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது சில பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனதாரர் ராம்குமார் ஆதித்தன் மீண்டும் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் ஹேமலதா ஆகியோர் முன்பு, விசாரணைக்கு வந்தபோது யுஜிசி தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும் அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. பிரதான வழக்கு விசாரணை நாளை மறுதினம் வர உள்ளதால், அந்த வழக்கோடு சேர்த்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

Also Read: #StudentsLivesMatter : “அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும்” - கல்லூரி மாணவர்கள் கோரிக்கை!