File image
Tamilnadu

“தமிழ்நாட்டில் பா.ஜ.கவுடன் இணையும் கட்சிக்கு பீகாரின் நிலைதான் ஏற்படும்” : டி.கே.எஸ்.இளங்கோவன் சாடல் !

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தனது மாநிலங்களவை உறுப்பினர் நிதி 20 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்ததை தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும், மாநில செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் திறந்து வைத்தார்.

தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும், மாநில செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமியாபுரம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் கட்ட தனது உறுப்பினர் நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.

தற்போது கட்டிடப்பணிகள் முடிந்து வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு புதிய வகுப்பறைக் கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பீகாரில் செல்வாக்காக இருந்த நிதிஷ்குமார் அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததன் விளைவாக, ராஷ்டரிய ஜனதாளத்தை விட குறைவான இடங்களையே பெற்றுள்ளார்.

பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தால் அவர்கள் பின்னுக்கு தள்ளப்படுவார்கள் என்பதற்கு நிதிஷ்குமார் உதாரணமாகும். பா.ஜ.கவைப் பொறுத்தவரை அவர்கள் அரசியல் செய்கிறார்கள். தமிழ்நாட்டிலும் பா.ஜ.கவுடன் இணையும் கட்சிக்கு இதுதான் நிலை. பீகாரில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், அந்த வெற்றி நியாயமான வெற்றிதான என்பது கேள்விக்குரியாக உள்ளது.

அதுமட்டுமல்லாது தமிழகத்தில், முருகன் வேலை சுமந்து கொண்டு பா.ஜ.கவினர் சாலையில் நடந்து கொண்டு இருக்கிறார். ஆனால் திராவிட இயக்கங்கள் ‘முருகன்கள்’ கோவிலுக்குள் சென்று சுவாமிக்கு பூஜை செய்ய உரிமை வேண்டும் என போராடி வருகிறது. அதைத்தான் தலைவர் கலைஞர் அன்றே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார். வேல் யாத்திரை என்பது முருகன் மீது உள்ள பக்தி இல்லை. இது ஒரு அரசியல் விளையாட்டு” எனத் தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் துரை, மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் டாக்டர்.செல்லத்துரை, ரவிசங்கர், தென்காசி நகர செயலாளர் சாதீர் உள்ளிட்ட தி.மு.கவினர்கள் கலந்து கொண்டனர்.

Also Read: “முறைகேடில்லாமல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துக” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!